தீவிரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறி பாகிஸ்தான் அரசு இரட்டை வேடம் போடுகிறது: அமெரிக்கா கடும் கண்டனம்

‘‘தீவிரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறி பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது’’ என்று அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்த ஆண்டு சுமார் ரூ.1,600 கோடிக்கு மேலான நிதியுதவியை பாகிஸ்தானுக்கு வழங்காமல் ட்ரம்ப் நிறுத்திவிட்டார். கடந்த புத்தாண்டு தினத்தன்று அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார்.

ட்ரம்ப்பின் முடிவை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வரவேற்றுள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்துக்கு வெளியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் நிக்கி ஹாலே கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு 255 மில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்ததற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி வந்தது. அதற்கு கிடைத்தது எல்லாம் ஏமாற்றுவேலை, பொய்கள்தான். தீவிரவாதத்தை ஒடுக்குவதாக கூறி பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது.

அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றுவது போல் காட்டிக் கொள்கிறார்கள். அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற விளையாட்டுகளை ட்ரம்ப் நிர்வாகத்தால் ஏற்க முடியாது. தீவிரவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுப்பதில் அதிகபட்ச ஒத்துழைப்பை பாகிஸ்தானிடம் அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். தீவிரவாதத்துக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தால், எல்லாவிதமான நிதியுதவியையும் நிறுத்திவிட அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார்.

இவ்வாறு ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறினார்.- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE