சிறப்பு கட்டுரைகள்

254 பேனா நிப்புகளால் எழுதப்பட்ட மாபெரும் புத்தகம்

செய்திப்பிரிவு

உலகின் மிக நீண்ட அரசியல் சாசனம் இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கு மேலும் சுவாரஸ்யமான பல தகவல்கள் இது குறித்து இருக்கிறது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

# மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 465 உட்பிரிவுகள் மற்றும் 1 லட்சத்து 46 ஆயிரம் சொற்கள் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் உள்ளன.

# நமது அரசியல் சாசனம் அச்சடிக்கப்பட்ட நூல் அல்ல. பிரேம் பெகாரி ரெய்ஜாடா என்ற கையெழுத்து கலைஞர்தான் தனது கைப்பட எழுதினார். 254 வகையான விதவிதமான பேனா நிப்புகளை பயன்படுத்தி எழுதி முடிக்க 6 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். சன்மானம் கோராமல் இதனை பிரேம் செய்தார். அதற்கு பதில் சாசனத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தான் கையெழுத்திட நேருவிடம் ஒப்புதல் பெற்று செய்தார்.

# இந்த புத்தகத்தில் மவுரியா மற்றும் குப்தர் கால சித்திரங்கள், வேத காலம் முதல் நவீன காலம்வரை வரலாற்றை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

# பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்ச்சி செய்து அவற்றில் காணப்பட்ட மக்கள் நல அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு இந்திய அரசியலமைப்பை டாக்டர் அம்பேத்கர் வடித்தார்.

# 60 விதமான அரசியலமைப்பு சட்ட புத்தகங்களை இதற்காக டாக்டர் அம்பேத்கர் ஆராய்ச்சி செய்தார்.

# 11 மாதங்கள் 18 நாட்கள் சாசனத்தின் வரைவு தயாரிக்க டாக்டர் அம்பேத்கர் எடுத்துக் கொண்டார்.

# ஆங்கிலம், இந்தி இரண்டிலும் எழுதப்பட்ட இப்புத்தக்கம் டேராடூனில் அச்சடிக்கப்பட்டது.

# மேற்கு வங்க மாநிலத்தில் ரவிந்தரநாத் தாகூர் தொடங்கிய சாந்திநிகேத்தன் நுண்கலை கல்லூரியைச் சேர்ந்த கலைஞர்கள் இந்திய அரசியலமைப்பு புத்தகங்களின் பக்கங்களில் அழகிய ஓவியங்களை தீட்டினர். நந்தலால் போஸ், பெகார் ராம் மனோகர் சிங்கா அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.

# பெண்களுக்கான உரிமைகள் சாசனத்தில் இடம்பெற அம்பேத்கர் மிகவும் போராடினார். இந்திய அரசியல் சாசனம் வகுக்கப்பட்ட பிறகுதான் இந்திய பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிட்டியது.

# இந்திய அரசியல் சாசனத்துக்கு 3 அசல் பிரதிகள் உள்ளன. அவை ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பெட்டிகளுக்குள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தொகுப்பு: ம.சுசித்ரா

SCROLL FOR NEXT