இந்திய அரசியலமைப்பு நாளின் முக்கியத்துவம் அறிவோம்

By சு. முத்துக்குமார்

இந்திய அரசியலமைப்பை வடிவமைக்கும் முக்கிய குழுவான அரசியல் வரைவுக்குழு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 1947 ஆகஸ்ட் 29 அன்று அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களாக ஏழு பேர் இடம் பெற்றனர். இக்குழு 60 நாடுகளின் அரசியலமைப்பை ஆய்வு செய்து உருவாக்கப்பட்டது. அரசியல் வரைவுக்குழு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க 2 வருடங்கள் 11 மாதங்கள் 18 நாட்கள் எடுத்துக் கொண்டது. இந்திய அரசியலமைப்பை உருவாக்க நடைபெற்ற 11 அமர்வுகளில் 10-வது அமர்வு 1949 நவம்பர் 26 அன்று நடைபெற்றது. அன்றைய தினம் இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வே தேசிய சட்ட தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக் கப்படுகிறது. அரசியல் நிர்ணய சபையின் கடைசி கூட்டம் 1950 ஜனவரி 24 அன்று நடைபெற்றது. அன்றைய தினம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவை அங்கீகரித்து அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த 284 உறுப்பினர்கள் கையெழுத் திட்டனர். இதைத் தொடர்ந்து 1950 ஜனவரி 26 ஆம் நாள் முதல்இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது. இதுவே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

கண்போல் மக்களை காக்கும் சட்டம்: இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட புதிதில் எட்டு அட்டவணை களும் 22 பகுதிகளும் 395 விதிகளும் கொண்டதாக இருந்தது. தற்போது 12 அட்டவணைகளும் 25 பகுதிகளும் 465 க்கும் மேற்பட்ட விதிகளும் கொண்டதாக விளங்குகிறது. உலகில் எந்த ஒரு அரசியலமைப்பும் இவ்வளவு அதிக விதிகளையோ அட்டவணைகளையோ கொண்டிருக்கவில்லை.

இந்திய அரசியலமைப்பின் இதயம்: இந்திய அரசாங்கம் மத்திய அரசு மாநில அரசு என இரண்டு வகையான அரசாங்கங்களைப் பெற்ற கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி சிறப்பு கூறுகளின் கலவையாகும். விதி 32 நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையானது வேறு எந்த நாட்டின் குடிமகனுக்கும் அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டங்கள் வழங்காத ஒன்றாகும். அதாவது தனிநபர் ஒருவரின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் நேராக உச்ச நீதிமன்றத்தை நாடலாம். மேலும் இவ்விதி ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வழங்கி அதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கிறது. எனவேதான் சரத்து 32ஐ இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

மதச்சார்பற்ற நாடு: 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். தேர்தலில் வாக்களிப்பதில் இந்தியகுடிமக்களிடையே சாதி, மதம், பாலினம் அல்லது தகுதி அடிப்படையில் எந்த பாகுபாடும் கடைபிடிக்கப்படு வதில்லை. மேற்கண்ட சிறப்பு அம்சங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது. முகவுரையில் இடம்பெற்றுள்ள இந்தியா ஒரு இறையாண்மை மிக்க மதச்சார் பற்ற நாடு... என்று தொடங்கும் வார்த்தைகள் இந்திய அரசமைப்பின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

சுமார் 75 சதவீதத்திற்கும் மேல்குறிப்பிட்ட ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வாழும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்து இந்திய அரசியலமைப்பைக் கட்டமைத்த டாக்டர் அம்பேதகர் உள்ளிட்ட பெரியோர் எவ்வளவு தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து இருக்கிறார்கள் என்பதை நாம் அறிய முடியும். நமது நாட்டில் பல்வேறு இனம், மதம், மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் வாழ்ந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னத கோட்பாட்டிற்கு இணங்க நம் நாட்டில் வலுவான ஜனநாயகம் தழைத்தோங்குவதற்குத் தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டமும் அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறப்பம்சங்களும் தான் அடிப்படைக் காரணம்.

- கட்டுரையாளர்: அரசு பள்ளி ஆசிரியர்; தொடர்புக்கு :muthukumartrici@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

வணிகம்

49 mins ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்