கல்வியை மக்களுக்குக் கொடுப்பதென்பது அரசின் கடமை. அந்தச் சிலுவையை அரசு சுமக்கவில்லை என்றால் நான் தனியாகவே சுமப்பேன் என்னால் இயன்றவரை என்றவர் டாக்டர் ரஃபியுதீன் அகமது.
கற்றவர் கடமை என்ன? அதை மற்றவருக்கும் சொல்லிக் கொடுப்பது அல்லவா? அப்படி பல் மருத்துவம் படித்த ஒருவர் பின்னாளில் பல் மருத்துவக் கல்லூரியையே தொடங்கிய வரலாற்றைப் பற்றிதான் இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
டாக்டர் ரஃபியுதீன் அகமது. இதுதான் அவரது இயற்பெயர் என்றாலும், எல்லோராலும் டாக்டர் ஆர். அகமது என்றே அழைக்கப்பட்டார். பிரிவினைக்கு முந்தைய கால இந்தியாவின் ஒருபாகமான கிழக்கு வங்கத்தில் (இன்று வங்கதேசம்) 1890 டிசம்பர் 24 அன்று பிறந்தார்.
மௌலவி சஃபியுதீன் அகமது மற்றும் ஃபைசுன்னிஸா தம்பதியினரின் நான்கு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தார். தந்தை சஃபியுதீன் அகமது துணையாட்சியராகப் பணிபுரிந்த பர்தான்பரா மாவட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்ட ‘டாக்கா மதராஸா'வில் சிறப்பாக பயின்றார். தந்தையின் வழிகாட்டுதலுடன் அடுத்து தனது துறையாக மருத்துவத்தை தேர்ந்தெடுத்து, 1906-ல் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார்.
வேண்டா வெறுப்பாகப் பெற்ற பட்டம்: சிறுவயது முதலே வெளிநாட்டில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் கனவு கொண்டிருந்தார் அகமது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார சூழல் அவரது கனவை நிறைவேற்றி அவ்வளவாக இடமளிக்கவில்லை. அதனால், அண்டை நாடான சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்து, பணிபுரிந்தபடி பட்டப்படிப்பு பயில முயன்றார். ஆனால், சென்ற இடம் தனது கல்விக் கனவுக்கு ஏற்புடையதாக இல்லை.
ஆகையால் வருத்தத்துடன் தாயகம்திரும்பிய அவரை, அலிகார் பல்கலைக்கழகத்தில் பயிலுமாறு தந்தை வலியுறுத்தினார். பட்டப்படிப்பு முடிந்தவுடனாவது வெளிநாட்டிற்கு மேற்படிப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற உறுதி மொழியுடன்தான், அலிகர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1908-ல் பட்டதாரியானார் அகமது.
மேற்படிப்பு அயல்நாட்டில்தான் என்றிருந்த அகமதுவின் கனவில் 1909-ல் உடல்நலக்குறைவால் தந்தை அடைந்த அகால மரணம் அடுத்ததொரு இடியாக இறங்கியது. நிலைகுலைந்த அகமது, மனதளவில் தன்னை மெல்லத் தேற்றிக் கொண்டு, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பயணச்செலவுக்கான பணம் சேர்ந்தவுடன் படிப்பைத்தேடிப் புறப்பட்டார். முதலில் மும்பையில் இருந்து இங்கிலாந்து, பிறகு அங்கிருந்துஅமெரிக்கா சென்றவர், எண்ணற்ற துயர்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழகத்தில், பல் மருத்துவத் துறையில் மாணவராகச் சேர்ந்தார்.
சோதனைக்கு பின்... கல்லூரி காலம் முழுவதும் பகுதிநேரப் பணிகள் செய்தே தனது தேவைகளையும் கல்லூரிச் செலவுகளையும் ஈடுகட்டிய அவர், 1915-ல் டாக்டர் ஆஃப் டென்ட்டல் சர்ஜரி(DDS)யை முதல்நிலையில் தேர்ந்தார். தொடர்ந்து அங்கேயே பாஸ்டன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பல் மருத்துவத்திலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.
கல்வி கற்கும் காலங்களில் மற்ற அனைவரும், கற்ற கல்வியை வைத்து எப்படி பொருள் சேர்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, அகமது மட்டும் 'தாய்நாடு திரும்பியதும் எல்லோரும் கல்வி கற்க இதே தரத்தில் ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என்று கனவு காண ஆரம்பித்தார்.
முதலாம் உலகப் போர் முடியும்வரை மசாசுசெட்ஸின் ஃபோர்சித் குழந்தைகள் பல் மருத்துவமனையில் பணிபுரிந்தார். பிறகு 1919-ல் நாடு திரும்பிய டாக்டர் ரஃபியுதீன் அகமது, முதலில் தனது பல் மருத்துவப் பணியை கொல்கத்தாவில் தொடங்கியதோடு, தனது கனவான கல்வியமைப்பு ஒன்றைத் தொடங்கவும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆரம்பத்தில் அவரது முயற்சிகளை அப்போதைய அரசு கண்டுகொள்ளாததால், அரசு சுமக்கத் தவறிய சிலுவையைத் தானே சுமக்கத் தயாரான டாக்டர் அகமது. 1920-ல் தனது சொந்த முயற்சியால் நியூயார்க் சோடா ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் நிதியுதவியுடன், சிறியதொரு கட்டிடத்தில், வெறும் 11 மாணவர்களுடன் 'கல்கத்தா பல் மருத்துவக் கல்லூரி'யைத் ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பல்வேறு சோதனைகளுக்கிடையே, இந்தியாவின் முதல் பல் மருத்துவக் கல்லூரியைத் திறம்பட அவர் நடத்தியதைப் பார்த்த அரசு 1923-ல் அவரது கல்லூரிக்கான அங்கீகாரத்தை அளித்தபோது கிட்டியது அவரது பயணத்தின் முதல் வெற்றி. (டாக்டர் அகமதுவின் மகிமை தொடரும்) - கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com