போட்டித் தேர்வுகள் எழுதுவதையே முழு நேரப்பணி என்றாக்கியதன் மூலம் 2013 பேட்சின் உத்தரப்பிரதேச பிரிவில் அம்பேத்கர் நகர் மாவட்ட ஆட்சியராக ஆகியுள்ளார் சென்னை தாம்பரத்தை சேர்ந்த என்.சாமுவேல் பால்.
இவரது தந்தை, சென்னை கப்பல் துறைமுகத்தின் கூட்டுறவு வங்கி கணக்காளராக பணியாற்றிய கே.நடராஜன். இவரது அன்னை தாயம்மாவும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் அலுவலர் பணியில் ஓய்வு பெற்றவர். மூத்த சகோதரர் ஸ்டீபன் பால், சுவிட்சர்லாந்தில் விப்ரோ ஐ.டி. பிரிவின் அதிகாரியாக உள்ளார். உபி இந்திய வனப் பணி அதிகாரியான திவ்யா, சாமுவேல் தம்பதிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
பள்ளிக் கல்வி சென்னையில் ஆங்கில வழியில் பெற்றதன் மூலம் ஆங்கில மொழி புலமையை வளர்த்துக் கொண்டார். பிளஸ் 2-வில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் படித்தவர், சென்னையின் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து 2007-ல் முடித்தார். காக்னிஸண்ட் ஐடி நிறுவனத்தில் கேம்பஸ் தேர்வில் கிடைத்த பணியில் இணைந்தார். தமிழகத்தின் 1976 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தன் பெரியப்பா அவரது வீட்டிற்கு வந்துசெல்வது வழக்கம். அப்போது அந்த அதிகாரியின் சீரூடை, கம்பீர நடை, அரசு வாகனம், உதவிக்கு காவலர்கள் என பார்த்த சாமுவேலுக்கு அதன் மீது தீரா காதல் உண்டானது. எனினும், இடையில் பல ஆண்டுகள் அந்த நினைப்பே இல்லாமல் இருந்தவர் மீண்டும் ஐடி வேலையில் சேர்ந்ததும் துளிர்த்தது.
அடுத்தடுத்து கிடைத்த பணிகள்: வேலை செய்து கொண்டே 2009-ல் முதல் முயற்சியாக குடிமைப்பணி தேர்வை எழுதியவரால் பிரிலிம்ஸில்கூட தேர்ச்சி பெற முடியவில்லை. அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு அனைத்துவகை போட்டித்தேர்வுகளை எழுதுவதையே தனது முழுநேரப் பணியாக்கிக் கொண்டார்.
2012-ல் இரண்டாவது முயற்சியில் தமிழகக் காவல்துறையின் டிஎஸ்பி ஆனார். இதற்கு முன்பாக எஸ்எஸ்சி எழுதி சிஆர்பிஎப் துணை கமாண்டரானார். பிறகு மத்திய உளவுத்துறையிலும் அதிகாரியாகும் வாய்ப்பு சாமுவேலுக்கு கிடைத்தது. இவை அனைத்திலும் சிறப்பு விடுமுறை அல்லது பணியில் சேர கால அவகாசம் பெற்று யூபிஎஸ்சியை சாமுவேல் தொடர்ந்துள்ளார்.
இது குறித்து சாமுவேல் நினைவுகூருகையில், ‘‘சுய உழைப்பால் நான் பள்ளியில் எப்போதுமே ஒன்று அல்லது இரண்டாவது ரேங்க் பெற்று வந்தேன். 10-ம் வகுப்பிலும், பிளஸ் 2-விலும் 92% மதிப்பெண் பெற்றேன். ஓட்டப்பந்தயம், கிரிக்கெட், கால்பந்து என பல்வேறு விளையாட்டுகளிலும் பரிசுகள் பெற்றுள்ளேன். இதர கலைநிகழ்ச்சிகளிலும் ஆர்வம் குறைந்ததில்லை. இதனால், எனது திறனுக்கு ஏற்றது குடிமைப்பணி எழுதி ஐஏஎஸ் ஆவதே என முடிவு செய்தேன். நான் உயர் அதிகாரியாக வேண்டும் என தொடர்ந்து என் தாய் ஊக்கப்படுத்தியதும் ஐஏஎஸ் பெற முக்கிய காரணம்” எனத் தெரிவித்தார்.
சிறந்த ஆளுமைகள் அளித்த பயிற்சி: சாமுவேலுக்கு யூபிஎஸ்சியின் விருப்பப் பாடங்களாக புவியியலும், பொது நிர்வாகமும் இருந்துள்ளன. சென்னையின் அண்ணா அரசு பயிற்சி மற்றும் 3 தனியார் பயிற்சி நிலையங்களிலும் பயின்றுள்ளார். அதன் பிறகு டெல்லி சென்று மேலும் இரண்டு நிறுவனங்களில் பயிற்சி பெற்றுள்ளார். ஒருகட்டத்தில் டெல்லியில் யூபிஎஸ்சி பயிற்சிக்கு புகழ்பெற்ற வாஜிராம் ரவி பயிற்சி நிலையத்தில் இணைந்துள்ளார். இவரது வெற்றிக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அளித்த நேர்முகத்தேர்வு பயிற்சியும், தலைமைச் செயலாளரான வே.இறையன்பு எடுத்த ஆளுமை திறன் வகுப்புகளும் கூட காரணமாயின.
இது குறித்து உபியின் அம்பேத்கர் நகர் மாவட்ட ஆட்சியரான சாமுவேல் கூறும்போது, “2010-ல் இரண்டாவது முயற்சியில்கூட என்னால் பிரிலிம்ஸ் வெல்ல முடியவில்லை. மெயின்ஸில் வெறும் 7 மதிப்பெண்ணால் 2011-ல் வாய்ப்பு தவறியது. 2012-ல் நான்காவது முறையாக முயன்று, 2013 பேட்சின் உபி அதிகாரியானேன். பல ஆண்டுகளாகப் படித்து அப்பாடங்களில் சிறந்த அறிவை பெறுவது முக்கியமல்ல. அந்த அறிவை தேர்வுகளில் குறித்த நேரத்தில் பயன்படுத்தி சரியான விடைகளை எழுதுவதுதான் முக்கியம். குறிப்பாக இப்பயிற்சியை நம் பள்ளிக்கல்வி முதல் வளர்த்துக் கொண்டால், ஐஏஎஸ் பெறுவது எளிதாகி விடும்” எனத் தெரிவித்தார்.
உபியின் ஐஏஎஸ் அதிகாரியானதும் சாமுவேல் முதன்முதலில் லக்கிம்பூர்கேரியின் உதவி ஆட்சியர் ஆனார். அலகாபாத்தின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி, உபி நீர்வளர்ச்சி ஆணையகம் பரேலி மாநகராட்சி ஆகியவற்றின் ஆணையராகவும் பணி செய்துள்ளார். இதில், அலகாபாத்தின் கும்பமேளாவிற்கு வந்த 24 கோடி பேரின் திறந்தவெளி கழிப்பிட வழக்கத்தை 2019-ல் மாற்றியது சாமுவேல் இடம்பெற்ற குழுவின் சாதனை.
இதற்காக அவர் 10,000- க்கு பதிலாக ஒரு லட்சத்து இருபதாயிரம் தற்காலிகக் கழிப்பிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்தார். பரேலியில் ரூ.13 கோடி இழப்பை ஏற்படுத்திய அரசியல் தலைவரை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில், வென்று அரசுத் திட்டத்தை அமலாக்கினார். அம்பேத்கர் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வளர்ச்சி அலுவலகம் என இரண்டிற்கும் முறையே ஐஎஸ்ஓ 9001 மற்றும் 2015 பெற்றுள்ளார். இதுபோன்ற சாதனைகளை தொடரும் அதிகாரி சாமுவேல் பால், உபி அரசின் பாராட்டை தொடர்ந்து பெற்று வருகிறார். - தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in