தொடர்கள்

பெரிதினும் பெரிது கேள் - 17: சராசரி மாணவன் டூ சிஇஓ

பிரியசகி

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அது. கரோனா பேரிடரால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நாட்களில் செல்போனுக்கும், டிவிக்கும் அடிமையான பல பிள்ளைகளுக்கு இப்பொழுது வகுப்பறையில் கவனிப்பது, வீட்டுப்பாடம் செய்வது, படிப்பது எல்லாமே சிரமமாக உள்ளது. இதனால் ஆசிரியர் ராணி அவ்வப்போது கவனம், நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிப்பார். வாரம் ஒரு முறையாவது ஏழ்மையான நிலையில் இருந்து குறிக்கோளுடன், கடினமாக உழைத்து முன்னேறியவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறுவார். இன்றும் அப்படியான ஒரு தயாரிப்புடன் வகுப்பறைக்கு வந்திருந்தார்.

பிள்ளைகளா, இன்னைக்கு ஒருத்தரோட கதையை சொல்ல போறேன். அவர் யாருன்னு முதல்ல கண்டுபிடிக்கிறவங்களுக்கு ஒரு பரிசு உண்டு என்றார். சரிங்க டீச்சர் என்றனர் மாணவர்கள். மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் படித்தது சென்னையில். சின்ன வயசுல இவர் வீட்டில் டிவி கூட கிடையாது. கண்ணாடி அணிந்த ஒல்லியான உருவத்தால் நண்பர்களின் கேலி கிண்டலுக்கு அதிகம் ஆளானவர்.

அப்படி யாரும் படிக்கலயே! - புத்தக வாசிப்பு இவருக்கு பிடித்தமானது. போன் நம்பரை எல்லாம் மனப்பாடமாக சொல்லும் சிறப்பான நினைவாற்றல் கொண்டவர். காரக்பூரில் உள்ள ஐஐடியில் பொறியியல் படித்தார். மேல்படிப்பு படிக்க அமெரிக்கா செல்வதற்கு கடன் வாங்க வேண்டிய குடும்ப சூழ்நிலையை உணர்ந்து நன்கு படித்தார். தன் திறமையை மதித்து வேலை கொடுத்த நிறுவனத்தை கடின உழைப்பால் உலகின் தலைசிறந்த டெக் நிறுவனம் ஆக்கி, அதன் தலைமை செயலதிகாரியாக உயர்ந்தார். அப்போது அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை இவரைப் பற்றி தகவல் சேகரிக்க இவர் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் விசாரித்த போது அப்படிப்பட்ட ஒருவர் தங்களிடம் படிக்கவே இல்லை என்றார்கள்.

ஆசிரியர்களின் நினைவில் கூட இல்லாத அளவுக்கு மிக சராசரியான மாணவர்தான் புகழ்பெற்ற அமெரிக்க கம்பெனியின் சிஇஓ. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான போது வெளிநாட்டினர் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்படும் என்றார். அமெரிக்காவில் ஐடி நிறுவனங்களில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள்தான் என்பதால் பிரபல ஐடி நிறுவனங்கள் எல்லாம் பதறின. ஆனால், இவர், “ நீ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்; எங்கள் கம்பெனியில் யாரை வேலைக்கு வைக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்" என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்கா அதிபரையே எதிர்க்கும் இவர் யார் என்று உலகமே இவரை திரும்பிப் பார்த்தது. யார் இவர் கண்டுபிடிச்சிட்டீங்களா?

குறைந்த விலையில் அலைபேசி: டீச்சர் நான் கண்டுபிடிச்சிட்டேன் அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைதானே என்று கேட்டான் வேலப்பன். வெரி குட், கரெக்டா சொல்லிட்டியே என்ற ஆசிரியர் எல்லோரையும் கைதட்ட சொல்லி, அவனுக்கு ஒரு பேனா பரிசாக கொடுத்தார். உனக்கு இவரைப் பத்தி வேற என்ன தெரியும் சொல்லு வேலா. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற வெப் பிரவுசர் மட்டுமே பிரபலமா இருந்தப்ப இவர்தான் கூகுள் குரோம் கண்டுபிடித்தார். உலகம் முழுக்க ஆண்ட்ராய்டு போன் ரொம்ப கம்மி விலையில் கிடைக்க இவர்தான் காரணம். ரொம்ப சரியா சொன்ன. இன்னும் கூகுள் வரைபடம், வணிகம், உள் கட்டமைப்பு, ஆய்வு, விளம்பரம், யூ டியூப், கூகுள் செயலிகள் எல்லாத்துக்கும் இவர்தான் பொறுப்பு. கூகுளுக்கு மட்டுமல்ல அதன் தாய்நிறுவனமான ஆல்பபெட்க்கும் இவர்தான் தலைமை செயலதிகாரி. போன் பேசக்கூட காசு இல்லாமல் இருந்த இவரது இன்றைய ஒரு மாத வருமானம் 140 கோடி ரூபாய்.

இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? கடின உழைப்பு, பிற நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுப்பதாக ஆசை காட்டிய பொழுதிலும் தன் திறமையை நம்பிய கூகுள் நிறுவனத்தின் மீது காட்டிய விசுவாசம், உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற சிறுவயது கனவின் மீதான தணியாத ஆர்வம், சரியான முடிவெடுக்கும் திறன் இவையெல்லாம்தான் இவருடைய வெற்றிக்கு காரணம். டீச்சர் நாங்களும் இவர மாதிரி வெற்றி பெறனும்னா என்ன பண்ணனும் என்று கேட்டான் முருகேஷ். அதுக்கு உங்க திறமை என்ன? எந்த துறையில் உங்களால சாதிக்க முடியும்என்பதை கண்டுபிடிங்க. என்ன படிக்கணும்னு நினைக்கிறீங்களோ அதுல உறுதியா இருங்க. நல்லா படிங்க. கனவு நிறைவேறும் வரைக்கும் சோர்ந்து போகாம, எந்த கவனச் சிதறலுக்கும் இடம் கொடுக்காமல் உழைச்சா சுந்தர் பிச்சை மாதிரி நீங்களும் ஒருநாள் சாதனையாளரா மாறுவீங்க என்று ஆசிரியர் சொல்ல சொல்ல மாணவர்களின் கண்களில் லட்சிய கனல் எரிந்தது. - கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

SCROLL FOR NEXT