சமூக வலைத்தளத்தில் நிறைய ஃபாலோயர்களை கொண்டிருக்கும் நபர்களை இன்ஃப்லுயன்ஸர்ஸ் (Influencers) என்பார்கள். இவர்களின் காணொளிகளைப் பார்த்து அவர்களைப் பின்தொடருபவர்கள் இவர்களின் தாக்கத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். இப்படி நிதி தொடர்பான ஆலோசனை வழங்குபவர்களை ஃபினான்ஸ்ஷியல் இன்ஃப்ளுயன்ஸர்ஸ் என்பதைச் சுருக்கி ஃபின்ப்ளுயன்சர்ஸ் (Finfluencers) என்பார்கள். நிதி மேலாண்மையில் ஆழ்ந்த அனுபவத்துடன் சமூக வலைத்தள ஆலோசகராக இருப்பவர்களை நம்பலாம். ஏனெனில் நிதி மேலாண்மையைப் பொருத்தவரை ஒருவரின் அனுபவம், அவர் சொல்லும் ஆலோசனையில் உள்ள ரிஸ்க் என அனைத்தையும் பகுத்தாய்வது மிகவும் முக்கியமானது.
நன்றாக ஆட்டம் ஆடுகிறார், டப்ஸ்மாஷ் செய்கிறார் என்பதற்காக அவர் சொல்லும் நிதி ஆலோசனைகளில் ஈடுபடுவது, பங்குச்சந்தை, ட்ரேடிங், க்ரிப்ட்டோ ட்ரேடிங் பற்றி எதுவும் தெரியாமல் முதலீடு செய்வது, ஒருவர் சொல்லுகிறார் என்பதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை அவர் சொல்லும் இடங்களில் முதலீடு செய்வது என்பதெல்லாம் முட்டாள் தனமானது. அண்மை கால ஆய்வில் “கல்லூரி படிக்கிற நான் இவர் ஆலோசனை கேட்டு லட்சங்களில் சம்பாதிக்கிறேன், டுகாட்டி பைக் வாங்கிவிட்டேன், இனி படிக்கவே வேண்டாம், ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு சம்பாதிக்கிறேன் ” என்பது மாதிரியான ஷார்ட் வீடியோக்கள் அதிகமாக உலாவுகின்றன. இப்படி ஆசையைத் துண்டும் வீடியோக்களை போட்டுப் பல மாணவர்களின் பணத்தை சில போலி நிதி ஆலோசகர்கள் திருடிக் கொண்டிருக்கிறார்கள். க்ரிப்டோ ட்ரேடிங், ஸ்டாக் மார்கெட் ட்ரேடிங், மல்ட்டி லெவல் மார்கெட்டிங், போன்று பலவிதமான முதலீட்டு முறைகள் இருப்பது உண்மைதான். இதில் சிலர் பணம் ஈட்டி உள்ளார்கள். ஆனால், இவை எல்லாம் நிறைய ரிஸ்க் கொண்ட முதலீடுகள். போதிய அறிவோ, ஆய்வோ இல்லாமல் பணத்தை இவற்றில் முதலீடு செய்தால் மிக எளிதாக உங்கள் பணத்தை இழக்க நேரிடும். இதில் எச்சரிக்கை வேண்டும்.
முதலீடு செய்யப் போகிறேன் என முடிவெடுத்துவிட்டால் முறையாக இதைப் பயின்று ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள். நீங்கள் பார்க்கும் யூடியூப் விளம்பரங்கள், ரீல்ஸ், டிக்டாக் பிரபலங்கள் சொல்லுவதையெல்லாம் நம்பி விடாதீர்கள். அனுபவம் வாய்ந்த நிதி ஆலோசகர் யூடியூபில் சொன்னாலும், உங்கள் பணத்துக்கான ரிஸ்க் உங்களுக்குத்தான், நாளை நீங்கள் போய் யாரைக் கேட்டாலும் இழந்த உங்கள் பணம் ஒரு போதும் திரும்பக் கிடைக்காது. சமூக வலைத்தளங்களைப் பொழுதுபோக்கிற்காக மட்டும் வைத்துக்கொள்வது தான் சரி. மீறி உங்களுக்கு கற்கும் ஆர்வமிருந்தால் ஒரு முதலீட்டில் இறங்குங்கள். போலியான நபர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஏமாற வேண்டாம். - (தொடர்ந்து பேசுவோம்) கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர், தொடர்புக்கு: write2vinod11@gmail.com