தொடர்கள்

சின்னச் சின்ன மாற்றங்கள் - 14: நூலகத்தைத் தட்டி எழுப்பு

விழியன்

என்னை உருவாக்கியது புத்தகங்களே என்ற வாசகம் அறிவார்ந்த ஆளுமைகள் பலரின் வாழ்க்கைப் பதிவில் காணப்படுகிறது. மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே அதிஅற்புதமானது புத்தகம் என்பார்கள். உண்மையாகவே புத்தகங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடுமா? அதையும் புத்தகம் வாசிக்கத் தொடங்கினால் மட்டுமே உணர முடியும். இவ்வாறான புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டவையே நூலகங்கள்.

நம் மாநிலத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் நூலகங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நூலகம் கண்டிப்பாக அவசியம். ஆனால், எந்த அளவிற்குப் பயன்பாடு உள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஒரு பக்கம் புத்தகங்களின் பெருமைகளைப் பேசினாலும் மறுபக்கம் அவற்றை கொண்ட நூலகங்கள் தூசி தட்டும் அளவிற்கு இருப்பது அவல நகைச்சுவை.

ஆனால், உங்களால் இதனைச் சீர் செய்ய இயலும். சரி, எப்படி செய்வது? முதல் வேலையாக ஊரில் அல்லது பள்ளியில் உள்ள நூலகத்திற்குப் படை எடுங்கள். நாங்கள் நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள். நீங்கள் பயன்படுத்தவே நூலகங்கள். உங்கள் கூட்டமும் பெரியதாக இருக்கட்டும் உங்கள் குரல்களும் வலுவாக இருக்கட்டும்.

என்னால் முடியுமா? - அப்போது, நூலகத்தை பாதுகாக்கும் நபர்கள் நூலக பயன்பாட்டில் உள்ள சிக்கல்களைச் சொல்ல ஆரம்பிப்பார்கள். நூல்கள் குறைவாக உள்ளன, நூல்கள் கிழியும் நிலையில் உள்ளன, நூல்களை அடுக்க வசதி இல்லை என ஒவ்வொரு இடத்திலிருந்தும் பல காரணங்கள் வரும். அந்த சிக்கல்களை எல்லாம் பட்டியலிடுங்கள். சிறுவர்களான எங்களால் என்ன செய்துவிட முடியும் என தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள். பெற்றோரை ஆலோசனைக்கு அழையுங்கள், பள்ளி தலைமையிடம் ஆலோசனை பெறுங்கள், உள்ளூர் நபர்கள் யார் உதவி செய்ய முடியும் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

நூல்கள் மட்டுமல்ல நூலகத்திற்குச் செல்லும் செயல்பாடே அனுபவத்தையும் அறிவையும் தரவல்லது. இருக்கும் நூல் வகைகள், நூல்களின் தலைப்புகள், அதனை முறையாக அடுக்கும் முயற்சி, அதனை எப்படிப் பயன்படுத்த வைப்பது என்ற கூட்டுசிந்தனை, நூலகத்தில் அமர்ந்து வாசிக்கும் ஏற்பாடு, வெளியே நூல்களை எடுத்துச்செல்லும் ஏற்பாடு, பதிவுகளைப் பராமரித்தல், வகை வாரியாக நூல்களைப் பிரித்து அடுக்குதல், புத்தகங்களின் தன்மைகளை அறிந்துகொள்ளுதல், நேரம் ஒதுக்குதல், எல்லோரையும் நூலகத்தை பயன்படுத்த உற்சாகப்படுத்துதல் போன்ற செயல்களிலும் ஏராளமான கற்றல் நிகழும்.

நூலகத்திற்கும், நூல்களுக்கும், உங்களுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத தடை இருக்கிறது. அந்த தடையினை உங்களால் மட்டுமே சரி செய்ய இயலும். அதனை நீக்கிவிட்டால் பேரானந்தப் பெருவெள்ளத்தில் மிதப்பீர்கள். உங்களுக்குப் பின்னால் வரும் தம்பி, தங்கைகளும் பயனடைவார்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.

‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’

ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்

தொடர்புக்கு: umanaths@gmail.com

SCROLL FOR NEXT