செழியன் 11 ஆம் வகுப்பு மாணவன். தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும் தாழ்வு மனப்பான்மை கொண்டவன். படிப்பில் மிகவும் சராசரியான மதிப்பெண் பெறுபவன் என்பதால் பெற்றோர் அவனை அவன் தம்பியுடன் ஒப்பிட்டு பேசுவதும் இதற்கு ஒரு காரணம்.
வகுப்பில் போட்டிகள், பொறுப்பு வகித்தல் ஆகியவற்றுக்கு அழைத்தால் முன் செல்ல மாட்டான். ஆசிரியர்கள் ஏதேனும் நோட்டு புத்தகங்களை ஓய்வு அறையில் வைக்க சொன்னால்கூட தனியாக செல்லாமல் துணைக்கு நண்பர்களை அழைத்துச் செல்வான். வீட்டிலும் அம்மா கடைக்கு அனுப்பினால்கூட தம்பியையோ, பக்கத்து வீட்டு நண்பனையோ துணைக்கு அழைப்பான். தன்னால் தனியாக எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது என்று அவனுக்கு ஆழப் பதிந்துவிட்டது.
அத்தகைய சமயங்களில் அவன் துணைக்கு அழைப்பவர்கள் அவனை பயந்தாங்கொள்ளி என்று கேலி செய்வது அவனுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. தன்னை கேலி செய்யாத ஒருவரைக் கண்டுபிடித்து நட்பு கொள்ள ஏங்கினான். பள்ளி விடுமுறைக்கு பிரியமான மாமா வீட்டுக்கு செழியன் சென்றபோது," சரி அப்படி ஒருவரை எனக்குத் தெரியும்.
அவரது விலாசம் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை அவரை சந்திக்கும் வரை யாரிடமும் எந்த உதவியும் பெறக்கூடாது, சரியா?"என்றார் மாமா. செழியனும் அவரை சந்திக்கும் வரைதானே என்று ஒப்புக்கொண்டான். மாமா தந்த விலாசத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அலைந்து திரிந்து பலரிடம் விசாரித்து இடத்தை கண்டுபிடிக்கவே ஒரு நாளாகிவிட்டது. கதவைத் தட்டி, விலாசத்திலிருந்த பெயரைச் சொல்லிக் கேட்டதும் அவர் வெளியூர் சென்றிருப்பதாகவும் திரும்பி வர ஒரு வாரமாகும் என்றதைக் கேட்டதும் தலை சுற்றியது. ஒரு நாள் முழுவதும் கையில் காசில்லாததால் எதுவும் சாப்பிடாமல் களைப்புற்றிருந்தவனுக்கு இன்னும் ஒரு வாரம் என்ன செய்வது? யாரிடமும் எந்த உதவியும் கேட்கக் கூடாது என்று வேறு மாமா சொல்லிவிட்டாரே என்று யோசித்தவாறு நடந்தான்.
எதிர்பாராத வேலை
வழியில், “வேலைக்கு ஆள் தேவை” என்று ஒரு கடைவாசலில் எழுதியிருந்ததைப் பார்த்து, கடை முதலாளியை அணுகி வேலை கேட்டான். கடையில் உள்ள பொருட்களையெல்லாம் தூசி தட்டி, பெருக்கி சுத்தமாக வைத்திருக்க தினமும் மூன்று வேளை சாப்பாடு போட்டு தங்க இடமும் 50 ரூபாய் பணமும் தருவதாக சொன்னார். இப்போதைக்கு அவனுக்கு அதுதான் தேவையென்றதால் உடனே ஒப்புக் கொண்டான்.
அது ஒரு பரிசுப்பொருட்களை விற்பனை செய்யும் கடை. அங்கு மிக அழகான ஓவியங்கள் வரையப்பட்டு ‘பிரேம்’ போடப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஒவ்வொன்றாக ரசித்துப் பார்த்து சுத்தமாக துடைத்து வைப்பான். அவனுடைய அப்பா ஓர் ஒவியர் என்பதால் தினமும் அவர் வரைவதைப் பார்த்தே அவனும் வரைய கற்றுக்கொண்டவன், வரைவதை சந்தோசமாக ரசித்து வரைவான்.
ஆனால் தான் வரைந்த ஓவியங்களை இதுவரை யாரிடமும் காட்டியதே இல்லை. காரணம் அப்பா வரைந்ததோடு தன்னுடைய ஓவியங்களை ஒப்பிட்டு பார்த்து தனக்கு நன்றாக வரைய வராது என அவனாகவே முடிவுசெய்துவிட்டான். இப்போது கடை மூடிய பிறகு நிறைய ஓய்வு நேரம் கிடைத்ததால், சரி நம்முடைய சந்தோஷத்திற்காகவும் போரடிக்காமல் இருக்கவும் வரையலாமே என்று கையிலிருந்த பணத்திற்கு ஓவியம் வரைய தேவையான பொருட்களை வாங்கி வரையத் துவங்கினான்.
தினமும் இரவு முழுவதும் உறங்காமல் வரைந்து, பகலில் கடையிலும் வேலை பார்த்ததால் உடல் நலிவுற்று காய்ச்சல் வந்து விட்டது. வேலைக்கு அவன் வராதது கண்டு முதலாளி அவன் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பார்த்தார். காய்ச்சலுடன் அவன் படுத்திருப்பதையும் பக்கத்தில் இரு அழகான ஓவியங்கள் இருப்பதையும் கண்டு, "செழியா இதை நீயா வரைஞ்ச ரொம்ப அழகாயிருக்குடா, நீ இவ்ளோ நல்லா வரைவேன்னு எனக்கு தெரியாம போச்சே", என்று கட்டிப்பிடித்துப் பாராட்டினார்.
வாழ்க்கையில் முதல்முறையாக தன் திறமைக்காக பாராட்டப்படும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்தசெழியனுக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. காய்ச்சல் காணாமல் போனது. “தொடர்ந்து வரை, உன் ஓவியங்களை நானே நல்ல விலைக்கு வாங்குகிறேன்” என்றதும் நன்றியோடு முதலாளியை வணங்கினான்.
தேடி வந்த ஆள்!
அடுத்த நாள் தான் தேடி வந்த நபர் திரும்பி வந்து விட்டதை அறிந்து அவரைத் தேடிச் சென்று தான் வந்த விஷயத்தைக் கூறி, “என்னோடு வருகிறீர்களா?” என்று கேட்டான். அதுவரை கனிவாயிருந்த அவரது முகம் கடுகடுப்பாய் ஆனது. எனக்கு என்ன வேற வேலை வெட்டியே இல்லைன்னு நினைச்சியா? என்னால உன்கூட வர முடியாது. நீ தேடி வந்த ஆள் இந்த அறையிலே இருக்கான் போய்ப்பார் என்று பக்கத்து அறையை நோக்கி கை காட்டினார்.
அதிர்ந்து போன செழியன் ஏதும் பேசாமல் பக்கத்து அறைக்குப் போனான். அந்த அறை யாருமின்றி காலியாக இருந்தது கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளானான். ஆனால், அது ஒரு கண்ணாடி அறை எல்லாப் பக்கமும் இருந்த கண்ணாடிகளில் தன்னுடைய உருவம் காணப்படுவதைக் கண்டு திகைத்தான்.
அப்போது அறைக்கதவு திறக்கப்பட்டு மாமாவும், வெளியே அவனுடன் பேசிய நபரும் உள்ளே வந்தனர். “என்ன செழியா உன் வாழ்நாள் முழுவதும் உன்னுடனே இருந்து உனக்கு உதவி செய்யக் கூடிய ஒரே நபர் யாரென்பதைக் கண்டுபிடித்து விட்டாயா?" என்று மாமா கேட்டதும், உண்மை உரைக்க ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com