தொடர்கள்

மகத்தான மருத்துவர்கள்: 36 - தமிழ்நாடு கொண்டாடிய டாக்டர் ருக்மபாய்

டாக்டர் சசித்ரா தாமோதரன்

மணவிலக்கு கோரி ருக்மபாய் தொடுத்த வழக்கின் முடிவு ருக்மபாய்க்கு சாதகமாக வர, 1888 ஆம் ஆண்டு தாதாஜி - ருக்மபாய் திருமண உறவு முறிந்தது என ராணி அறிவித்தார். தாதாஜி தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு 2,000 ரூபாய் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு தனது கல்விக் கனவைத் துரத்த ஆரம்பித்தார் ருக்மபாய்.

விவாகரத்து கிடைத்த கணவர் தாதாஜி மறுமணம் செய்துகொள்ள, ருக்மபாய் நண்பர்களின் உதவி மற்றும் எடின்பரோவைச் சேர்ந்த டாக்டர் எடித் அவர்களின் நிதியுதவியுடன், 1889 ஆம் ஆண்டு மருத்துவம் பயில இங்கிலாந்து சென்றார். பெரிய வழிகாட்டுதல்கள் இன்றி, இங்கிலாந்தின் லண்டன் மகளிர் மருத்துவப் பள்ளியில் சேர்ந்து 5 ஆண்டுகள் மருத்துவம் பயின்று, 1895 ஆம் ஆண்டு மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற ருக்மபாய் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக இந்தியா திரும்பினார்.

சுகபிரசவமும் கல்வியும்: அதேசமயம் அவர் தொடங்கி வைத்த பால்ய திருமண சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் போராட்டங்கள் நாடெங்கும் வலுப்பெற, பருவமடைந்த பிறகு பெண்ணுக்கு மணமுடிப்பது எனும் சட்டம் 1891 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதற்கு மூல காரணமாக விளங்கிய ருக்மபாய் தாய்நாட்டில் பெரிதும் கொண்டாடப்பட்டார்.

மருத்துவம் முடித்தவுடன் தனது ஊரின் 'மேடம் காமா' மருத்துவமனையில் பணிபுரிய விண்ணப்பித்த ருக்மபாய்க்கு சூரத் நகரின் 'சேத் மொரார்ஜி' மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது. அந்த சிறிய மருத்துவமனையில் இரவும் பகலும் அயராது உழைத்தார் டாக்டர் ருக்மபாய். வீட்டுக்குள் அடைபட்டு இருட்டறையில் பிரசவித்த பெண்களை சுகாதாரமாக மருத்துவமனையில் பிரசவிக்கச் செய்தார்.

அதுமட்டுமன்றி, சுற்றிலும் ‌உள்ள கிராமங்களுக்குச் சென்றும், வீடுகளுக்கே சென்று பிரசவம் பார்த்தும் பெண்களின் நன்மதிப்பைப் பெற்றார். டாக்டர் ருக்மபாய் சென்ற இடங்களில் எல்லாம் பெண் கல்வியின் அவசியத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும், ஆரோக்கிய வாழ்வு பற்றிய விழிப்புணர்வையும் பற்றித் தொடர்ந்து பேசினார். அத்துடன் மதநம்பிக்கை உள்ள பெண்களை வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தி, அங்கு இவற்றைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

அதேசமயம் நாடெங்கும் பரவிய பிளேக் நோய் சூரத்தையும் தாக்க, அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அவரது வேகத்தைப் பாராட்டி, அவருக்குப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது ஆங்கிலேய அரசு.

சினிமாவான வாழ்க்கை வரலாறு: 1917 ஆம் ஆண்டு, சூரத் நகரிலிருந்து ராஜ்கோட் நகரத்திற்குக் குடிபெயர்ந்தார் ருக்மபாய். சில ஆண்டுகள் அரண்மனை மருத்துவராகவும் அதேசமயம் 'ரசூல்காஜி' பெண்கள் மருத்துவமனையின் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் அந்த நகர மக்களின் எளிய மருத்துவராகவும் பணிபுரிந்தார்.

தனது பணி ஓய்வுக்குப் பிறகு மும்பையில் வசித்தபடி பெண் கல்வி, முக்காடு ஒழிப்பு என சமூக நலனில் அக்கறை காட்டிய டாக்டர் ருக்மபாய், பெண்கள் கல்விக்கென நிதி திரட்டி உதவவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் தனித்திருந்து, ஆனாலும் அனைவரிடையேயும் அன்பையும் நம்பிக்கையையும் விதைத்த ருக்மபாய், 1955 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று தனது 90வது வயதில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இயற்கை எய்தினார்.

ருக்மபாய் பணிபுரிந்த சூரத் மருத்துவமனை இன்றளவும் அவரது பெயரில் இயங்கி பெண்கள் நலனில் பெரும்பங்கு ஆற்றி வருகிறது. அவரது வாழ்க்கை வரலாறு மராத்திய மொழியில் திரைப்படமாக வெளி வந்துள்ளது. அவரது அருஞ்செயல்களைப் பாராட்டிய கூகுள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு தனது முகப்பில் அவர் புகைப்படத்தை வைத்து சிறப்பித்துள்ளது.

விதியை தனது மதியால் மாற்றிய ருக்மபாய் எனும் பெண் மறைந்தாலும், அவர் ஏற்றிச்சென்ற பெண்ணுரிமை மதிவிளக்கு இன்றும் ஒளிர்ந்து வெளிச்சத்தைப் பரப்பி நிற்கிறது என்பதே உண்மை.

(மகிமை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

SCROLL FOR NEXT