தொடர்கள்

ருசி பசி - 3: ஹோட்டல் வந்தது எப்படி?

ம.பரிமளா தேவி

அவர்கள், இவர்கள் பிடித்தவர், பிடிக்காதவர், உறவினர், வேற்றார் என்று எந்தவித பாகுபாடும் பார்க்காமல் உணவை அனைவருக்கும் கொடுத்து உதவுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு பசியோடு யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டுப் பிறகு சாப்பிடுங்கள்.

சாப்பிடாமல் வைத்த பழைய உணவைசேமிப்பாக கருதி எடுத்து வைக்காமல், அதை உடனே பசியோடு இருப்பவர்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்கிறது, ‘ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்’ எனத் தொடங்கும் திருமந்திரப் பாடல்.

பகிர்ந்துண்ணுதல்: உணவின் மேல் அதிக ஆசை வைக்காமலும் பசியோடு இருக்கும்போது அவசர அவசரமாக வேகமாக சாப்பிடாமல் இருங்கள். காக்கை பசியோடு இருக்கும்போதும் கரைந்து கூப்பிட்டு மற்ற காகங்கள் வந்தபின் ஒன்றாகக் கூடி உண்பதைக் கண்டு, அடுத்தவருக்கும் உணவை கொடுத்து சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி.

உலகமெங்கும் பசிப்பிணி நீங்குக என மணிமேகலை கூறுகிறது.

தன் பெண்டு தன் பிள்ளை சோறு

வீடு சம்பாத்தியம் இவையுண்டு

தானுண்டேன்போன் இவையுண்டு

சின்னதொரு கடுகு போல்

உள்ளங் கொண்டோன்! என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

இலக்கியங்களில் உணவு குறித்த பதிவுகள் அனைத்துமே உணவை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவைக் குறித்து சிந்திக்கலாமே? பிறந்தநாள், திருமணம் மற்றும் விழாக்கால கொண்டாட்டங்களை, நட்சத்திர விடுதிகளில் கொண்டாடித் தீர்ப்பதிற்குப் பதில் உணவின்றி தவிப்போருக்கு உணவினை வழங்கலாம்.

ஒரு வேளைகூட உணவில்லாமல் தூங்க செல்லும் ஏழைகளைக் குறித்து சிந்தியுங்கள். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பது பழமொழி. பசி ஒருவனுடைய தலையெழுத்தையே மாற்றிவிடும். ஒரு வேளை உணவு உண்ணாமல் நம்மால் இருக்க முடியுமா? வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு இன்றும் எரிந்துகொண்டிருப்பது எதனால்? வறுமை நம்மை விட்டு முற்றிலும் விலகவில்லை என்பதை அறிவிப்பதற்கே. மனிதாபம் உள்ள தலைமுறையை வளர்த்தெடுப்போம்.

சோறு என்றே சொல்வோம்! - தமிழா் பண்பாடு ”சோறும் நீரும்விற்பனைக்கல்ல” என்கிறது. வறியார்க்குச் சோறிடுதல் அறம் என்கிற கோட்பாடுமட்டும் திரும்ப திரும்ப வலியுறுத்தப்படுகிறது. கிராமங்களில் சாவடியில் யாரும் உண்ணாமல் படுத்திருத்தால் அவர்களுக்கு இரவுச்சோறு கொடுக்கும் வழக்கம் இருந்ததாக தொ.பரமசிவன் குறிப்பிடுகின்றார். பசியோடு தங்களுடைய இடத்தில் ஒருவர் தூங்கச் சென்றால் மானக்கேடாக பார்த்தனர். சமண சமயமும் நான்கு வகையான கொடைகளில் உணவுக் கொடையையே முதலாவதாகப் பேசுகிறது.

அன்னதானம் செய்யும் வழக்கம் சமணர்களால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்கிறது அப்பர் தேவாரம். முதன் முதலாக விஜய நகரப் பேரரசு காலத்தில்தான் சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் எனப்படும் உணவு விடுதி தொடங்கப்பட்டதாக வரலாறு. இன்று சோறு என்னும் சொல்லேபயன்பாட்டில் இல்லை. படிக்காதவர்கள் பயன்படுத்துவது சோறு என்று நினைக்கின்றனர். குழந்தைகள் ’ரைஸ்’ என்றும்’சாதம்’ என்றும் சொல்வது வேதனையானது. இனியாவது சோறு என்று சொல்வோம்.

- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, திருப்பத்தூர் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com

SCROLL FOR NEXT