தன்னுடைய மகனுக்கு ரயில்வேயில் வேலை கிடைக்க ஆலோசனை கேட்டிருந்தார் பெற்றோர் ஒருவர். SCRA எனப்படும் ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரண்ட்டீஸ்ஷிப் எனப்படும் தேர்வினை பற்றி இந்த வாரம் விளக்குவதாக அவருக்கு பதிலளித்திருந்தேன்.
இத்தேர்வானது 1927-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரயில்வேயின் அலுவலர் (பொறியியல் பிரிவுக்கு) பணிகளுக்கு நேரடியாக தேர்வு மூலம் பணியமர்த்த அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தேர்வினை யூபிஎஸ்சி (UPSC) நடத்துகிறது. இதை 17-லிருந்து 21 வயதுக்குள் வேண்டும். பட்டியலினத்தவருக்கு 5 வருடமும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3 வருடமும் வயது வரம்பில் சலுகை உண்டு. கல்வித் தகுதியாக பிளல்2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்து குறைந்தபட்சம் 45% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: 3 தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு இது. தாள் I - ஆங்கிலம், general ability, 2 மணி நேரம், மதிப்பெண்: 200. தாள் II - பிசிக்கல் சயின்ஸ், 2 மணி நேரம், மதிப்பெண்: 200
தாள் III – கணிதம், 2 மணி நேரம், மதிப்பெண்: 200
இவ்வாறு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வினில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பெறும். இதற்கு 200 மதிப்பெண்கள்.
இத்தேர்வினில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4 வருட அப்ரன்டிஸ் பயிற்சியானது இந்தியன் ரயில்வே இன்ஸ்டிடியூட் ஆப் மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல் இஞ்ஜினியரிங் ஜமால்பூரில் வழங்கப்படும். பயிற்சியின்போது ஊக்கத்தொகை (stipend) வழங்கப்படும். அது மட்டுமின்றி 4 வருட பயிற்சியானது பிர்லா இன்ஸ்டிடியூட் மேஸ்ரா (ராஞ்சி) யுடன் இணைந்து பட்டம் வழங்கப்படுகிறது. வெற்றிகரமாகப் பயிற்சிகளை முடித்தவுடன் நேரடியாக அலுவலராக பணியில் சேரலாம்.
இதுமட்டுமின்றி சிவல் சர்வீஸ் தேர்வுகள் மூலம் குரூப் ஏ அலுவலராக
1. இந்தியன் ரயில்வே டிராபிக் சர்வீஸ் (IRTS)
2. இந்தியன் ரயில்வே அக்கவுணட்ஸ் சர்வீஸ் (IRAS)
3. இந்தியன் ரயில்வே பர்சோனல் சர்வீஸ் (IRPS)
4. இந்தியன் ரயில்வே இஞ்ஜினியரிங் சர்வீஸ் போன்ற பணியிடங்களும் நேரிடையாகவும் நிரப்பப்படுகிறது.
மற்ற நூற்றுக்கணக்கான பணியிடங்களான லோக்கோ பைலட், கார்டு, இஞ்ஜின் டிரைவர், டிடிஇ, கமர்சியல் கிளார்க் போன்றவற்றுக்கு ஆர்.ஆர்.பி. போட்டித் தேர்வினை நடத்துகிறது. எனவே தாங்கள் மகனை ஊக்கப்படுத்தி உரிய பயிற்சி எடுக்க உதவுங்கள். வேலை நிச்சயம்.
கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்