அரசு பேருந்தில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை கண்டித்து திருச்செங்கோடு - குமார பாளையம் சாலை கீழேரிப்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். 
நம்ம ஊரு நடப்பு

அரசு பேருந்தில் ஏற அனுமதிக்காததை கண்டித்து திருச்செங்கோடு அருகே மாணவர்கள் சாலைமறியல்

செய்திப்பிரிவு

நாமக்கல்: திருச்செங்கோடு - சங்ககிரி செல்லும்சாலையில் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளன.

அருகேயுள்ள கீழேரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்காக கீழேரிப்பட்டியில் இருந்து பள்ளி நேரத்தில் சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை சிறப்புப் பேருந்து குறித்த நேரத்திற்கு வராததால் அந்த வழியாக வந்த 8-ம் எண் அரசு பேருந்தில் மாணவ, மாணவிகள் ஏற முற்பட்டனர். ஆனால், அவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு நடத்துநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் திருச்செங்கோடு - குமாரபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருச்செங்கோடு காவல் துறையினர் சமாதானப்படுத்தினர்.

அதற்கு மாணவ, மாணவிகள், "சிறப்புப் பேருந்து சில நேரங்களில் தாமதமாக வருகிறது. அவ்வாறு வரும்போது இந்த பகுதி வழியாக செல்லும் எண் 8 மற்றும் இ- 5 என்ற எண் கொண்ட பேருந்துகளில் ஏறினால் நடத்துனர்கள் உங்களுக்கு சிறப்பு பேருந்தில் தான் இடம் எனக் கூறி இறக்கி விடுகின்றனர்.

பள்ளிக்கு தாமதமாக சென்றால் ஆசிரியர்கள் திட்டுகின்றனர். சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும்" என்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் மாணவ, மாணவிகளிடம் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

SCROLL FOR NEXT