நடப்புகள்

மிகச் சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ்: இங்கிலாந்து கேப்டன் பட்லர் புகழாரம்

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: டி20 உலகக் கோப்பை தொடரின் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியதாவது: என்னைக் கேட்டால், இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் தொடர்நாயகனாக சூர்யகுமார் யாதவைத்தான் சொல்வேன். மிகச் சுதந்திரமாக இந்தப் போட்டித் தொடரில் அவர் விளையாடினார். இந்தத் தொடரில் பல நட்சத்திர வீரர்கள் வரிசை இருந்தபோதும், கண்ணைக் கவரும் வகையில் விளையாடியவர் சூர்யகுமார் யாதவ். களத்தில் நின்று அவர் விளையாடிய விதம் என்னை பிரமிக்க வைத்தது. அவருக்கு தொடர்நாயகன் விருது தரலாம். அதேபோல் சக நாட்டு வீரர்கள் சேம் கரண், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோருக்கும் தொடர்நாயகன் விருது கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்நாயகன் விருதுக்கு இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் ஷதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிடி, இங்கிலாந்தின் சேம் கரண், ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கோப்பை தொடரில் 189.68 ஸ்டிரைக் ரேட்டுடன் அவர் 239 ரன்களைக் குவித்திருந்தார். இதில் 3 அரை சதங்கள் அடங்கும். அதேநேரத்தில் தொடர்நாயகன் விருது, பாகிஸ்தானின் ஷதாப் கானுக்குக் கிடைக்கலாம் என்று அணியின் கேப்டன் பாபர் அஸம் கருத்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT