கெய்ரோ: பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலகம் அழியும் அபாயம் ஏற்படும்என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால் வெள்ளம்,புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உலகம் தொடர்ந்து வெப்பமயமாகி வருகிறது. அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுவதால் நீர்மட்டம் உயரும் என்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், ஆண்டுதோறும் நடக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.சபையின் மாநாடு எகிப்தில் உள்ள ஷாம்-அல்-ஷேக் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசியதாவது: பருவநிலை மாற்றம் என்பது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாம் பருவநிலை மாற்றத்தின் நரகத்தை நோக்கி நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறோம். இதைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதிப்புகளை மாற்ற முடியாமலே போய்விடும். பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை இப்போதே நம்மால் பார்க்க முடிகிறது. பருவநிலை மாற்றத்தை தடுக்க தெளிவான நடவடிக்கைகள் தேவை. எந்த காலகட்டத்திற்குள் எந்தெந்த நடவடிக்கைகளை எடுத்து முடித்தாக வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் முடிவு செய்ய வேண்டும்.
2030-ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும். 2030-இல் முடியவில்லை என்றால் 2040-க்குள் நிச்சயம் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக கைவிட வேண்டும். பசுமைக்குடில் வாயுக்களை அதிகம் வெளியிடும் அமெரிக்கா மற்றும்சீனா பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். மனிதகுலத்தின் கண் முன்னே இப்போது இரண்டு தேர்வுகள்தான் உள்ளது. ஒன்று பருவநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் இதிலேயே சிக்கி உலகம் அழியும் அபாயம் ஏற்படும். உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு ஒத்துழைப்புடன் செயல்பட்டு பருவநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.