நடப்புகள்

லதா மங்கேஷ்கரின் நினைவாக அயோத்தியில் வீணை சிலையை திறந்து வைத்தார் பிரதமர்

செய்திப்பிரிவு

அயோத்தி: இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் நினைவாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட வீணை சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். நேற்று அவரது 93வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அயோத்தியாவில் அவரது நினைவாக பிரம்மாண்டமான வீணை சிலை அமைக்கப்பட்டுள்ளது. சரயு நதிக்கரையில் ரூ. 7.9 கோடி மதிப்பில் இது நிறுவப்பட்டுள்ளது. 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்ட இந்த வீணை சிலையை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். வீணை சிலை அமைந்துள்ள பகுதிக்கு ‘லதா மங்கேஷ்கர் சவுக்’ என்றும் மோடி பெயர் சூட்டினார். இந்நிகழ்ச்சியில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர்.

வீணை சிலையை திறந்து வைத்து காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: பிரபல பின்னணி பாடகியான பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் பிறந்த தினத்தில் அவரை நினைவுகூர்கிறேன். அவருக்கு நாட்டு மக்கள் மற்றும் என் சார்பாகவும் மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு நிறைய இனிமையான நினைவுகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் அவரது பாடல்களை கேட்கும் போதும் அவர் குரல் என்னை மயக்கும். அயோத்தியில் ராமர் கோவிலின் பூமி பூஜை முடிந்தவுடன் மகிழ்ச்சியில் என்னை தொலைபேசியில் அழைத்தார். ராமர் கோயில் கட்டப்படும் பணிகள் தொடங்குவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார்.

அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்ட வீணை சிலை கலைகளின் கடவுளாக வணங்கப்படும் சரஸ்வதியின் அடையாளமாக உள்ளது. இந்த வீணை சிலை இசை நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறும். வீணை சிலையில் உள்ள 92 வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்ட தாமரை லதா மங்கேஷ்கரின் 92 வயது வரையிலான வாழ்நாளை சித்தரிக்கிறது. அயோத்தியில் லதா மங்கேஷ்ரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வீணை சிலை அமைந்துள்ள பகுதிக்கு லதா மங்கேஷ்வரின் பெயரை சூட்டுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT