நடப்புகள்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவை நிர்ணயிக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு: 10 நாளில் அறிக்கை தர உத்தரவு

செய்திப்பிரிவு

ரத்து செய்யப்பட்ட 12-ம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய, 12 பேர் அடங்கிய குழுவை சிபிஎஸ்இ அமைத்துள்ளது. இந்தக் குழு 10 நாளில் அறிக்கை சமர்ப்பிக்கும்.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு 3 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உட்பட 7 வட மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின்கீழ் நடக்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.

தமிழக அரசு விரைவில் முடிவு

தமிழக அரசு 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் நேற்று முன்தினம் கருத்து கேட்டது. பெரும்பாலானோர் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. ஓரிரு நாளில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சயாம் பரத்வாஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா சூழல் காரணமாக மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. எனவே, இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது. மேலும், அந்த மாணவர்களுக்கு எந்த முறையில் தேர்வு முடிவுகளை அளிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் முடி வெடுக்கப்பட்டது.

அதன்படி, மத்திய கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் இணைச் செயலர் விபின் குமார், மத்திய கல்வி இயக்குநர் உதித் பிரகாஷ் ராஜ், கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆணையர் நிதி பாண்டே, நவோதயா வித்யாலயா சமிதி ஆணையர் விநாயக் கார்க் உட்பட 12 கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை 10 நாட்களில் சமர்ப்பிக்கும்.

SCROLL FOR NEXT