இந்தியாவில் செழுமையான கல்வி என்ற மரத்தைச் சீர்திருத்தம் என்ற பெயரில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெட்டினர்: குடியரசுத் தலைவர் கருத்து

By வ.செந்தில்குமார்

இந்தியாவில் செழுமையான கல்வி என்ற அழகான மரத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சீர்திருத்தம் என்ற பெயரால் வெட்டித் தள்ளினர் என்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 16-வது பட்டமளிப்பு விழா இன்று (மார்ச் 10) காலை நடைபெற்றது. 80 ஆயிரத்து 176 மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழாவுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரை செல்வி வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.

பின்னர், அவர் பட்டமளிப்பு விழா பேருரையாற்றும்போது, "திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழாவில் உங்கள் அனைவருடன் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என தமிழில் தனது பேச்சைத் தொடங்கினார்.

"இன்று பட்டங்கள் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித குலத்துக்கு சாகாவரம் பெற்ற அறக்கருத்துகளை வழங்கிய பெரும் புலவர்களில் ஒருவரான திருவள்ளுவரின் பெயரில் இந்தப் பல்கலைக்கழகம் உள்ளது. அவரது குறள்கள் உங்களது கல்வி மற்றும் வாழ்க்கையில் ஒன்றிணைந்த பகுதியாக இருக்க வேண்டும்.

வலிமையான கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போராடிய மண்ணில் நான் நிற்பதைப் பெருமையாக நினைக்கிறேன். 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் எழுச்சி, நமது விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு முறையும் நான் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், இங்கு கடைப்பிடிக்கப்படும் பெரும் பாரம்பரியத்துடன் எனக்குத் தொடர்பு உள்ளதைப் போல உணர்கிறேன்.

வேளாண்மை, பொறியியல் அற்புதங்களில் ஒன்றான கல்லணையைக் கொண்ட தமிழகம் இலக்கியத்தில் தனித்துவம் பெற்றுள்ளது. உலகின் சிறந்த பாசன முறைக்கு உதாரணமாக பழமையான அணைகளில் ஒன்றாக கல்லணை திகழ்கிறது.

தஞ்சையில் காவிரி ஆற்றின் குறுக்கே சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்த அணை, நமது பண்டைக்கால சமுதாயத்தினரின் பொறியியல் திறமைக்குச் சான்றாகத் திகழ்கிறது.

அறிவும், அறிவியல் உணர்வும், இந்த மக்களின் உள்ளார்ந்த பண்பாகத் தோன்றுகிறது. இந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களான கணித மேதை ராமானுஜன், நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் போன்றோர் இந்தக் காரணத்தால்தான் பெரும் புகழ் பெற்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த ஒரே கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியார். எனக்கு முன்னாள் பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகிய இரண்டு குடியரசுத் தலைவர்கள். இந்த மண்ணில் இருந்து வந்தவர்கள் என்பது பெருமைக்குரியதாகும்.

'கண்ணுடையர் என்பவர் கற்றோர்' என்ற திருவள்ளுவரின் அறிவார்ந்த வார்த்தைகள் உங்களது லட்சியமாகத் திகழ்கின்றன. அறிவுடையோர் மட்டுமே முகத்தில் இரண்டு கண்களைக் கொண்டுள்ளனர், மற்றவர்களுக்கு அவை இரண்டு புண்களே என்பது அதன் பொருளாகும்.

இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 20 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், நாட்டின் பெருமைமிகு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அறிந்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இங்கு தங்கப்பதக்கம் பெற்ற 66 பேரில் 55 பேர் பெண்கள். இதேபோல், ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற 217 பேரில் 100 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. அதேபோல், இந்த மேடையில் பதக்கம் பெற்ற 10 மாணவர்களில், ஒன்பது பேர் பெண்கள் என்பதை நான் கவனித்தேன். இது இந்தியாவின் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது. நமது நாட்டின் பெண்கள் கல்வி பெறுகின்றபோது, அவர்களது வருங்காலம் மட்டுமல்லாமல் நாட்டின் வருங்காலமும் பாதுகாக்கப்படுகிறது.

இந்தியாவின் உயர்கல்வி முறை, கிராமப் பகுதியிலும், ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கும் தொண்டாற்றும் அளவுக்கு விரிவடைந்திருப்பது மனநிறைவு அளிப்பதாக இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய கல்வி முறையாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும், இதில் உயரிய இடங்களைத் தொடுவதற்கு, இழந்த காலத்தை நாம் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே, இந்தியாவில் செழுமையான கல்வி முறை இருந்ததை காந்தியடிகள் 'அழகிய மரம்' என்று குறிப்பிட்டார். அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சீர்திருத்தம் என்ற பெயரால் வெட்டித் தள்ளினர். அந்த மாற்றங்களால் ஏற்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு நமது பாரம்பரியத்தை மீட்கவில்லை .

தேசிய கல்விக் கொள்கை - 2020, இந்தத் திசையில் பயணிக்கத் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட உறுதியான முடிவாகும். சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில், குழந்தைகளும், இளைஞர்களும் தங்களது தனி கல்வியைக் கற்றுக்கொள்ளும் வளர்ச்சி, மாற்றத்துக்கான முழுமையான நோக்கமாக இது கொண்டுள்ளது.

நமது பாரம்பரியம், நவீன கற்றல் ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கிணைத்து இந்தக் கல்விக் கொள்கை கொண்டுவரும். தார்மீக கல்வி, இந்தியக் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை இது வலியுறுத்துவதாக அமையும்.

இந்தக் கல்வி முறையிலிருந்து வெளிவரும் மாணவர் அதிக தன்னம்பிக்கையுடனும் எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தகுதியை உடையவராகவும் இருப்பார். மேலும், முன்னேற்றமான, தன்னிறைவு கொண்ட, நாட்டுக்கு மிகவும் அவசியமானவற்றைப் புதிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது. உயர் கல்வி முறை, சமத்துவமான நிபுணத்துவம் வாய்ந்த, அதிகாரமளித்தலை வழங்குவதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை இந்த நோக்கங்களை அடைவதற்கு முயல்கிறது.

'சர்' சி.வி.ராமன் குறிப்பிட்டதைப் போல, உயர் கல்வி நிறுவனங்கள், அறிவு விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி நாட்டுக்கு வழிகாட்ட வேண்டும். இதுதான், புதிய கொள்கையின் மதிப்புமிக்க உந்துதலாகும்.

உங்கள் அனைவருக்கும், உங்களது இந்தப் பயணத்தை அடைவதற்கு உதவிய உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.

இது உங்களது வாழ்க்கையின் புனிதமான ஆரம்பமாகும். இனி, உங்களது சொந்த வாய்ப்புகள், முயற்சிகள், அறிவாற்றல் ஆகியவற்றின் வலிமையால், உங்களது வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டில் நீங்கள்தான் முன்னேற வேண்டும். நாம் அதிகம் கற்றால், நமது அறியாமை அதிகமாக விலகுவதை உணரலாம். இதை 'கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு' என்ற தமிழ் பொன்மொழி அழகாக உணர்த்தும்.

நாம் புத்தகங்களில் இருந்து எதைக் கற்றோம் என்பதை விட வாழ்க்கையில் நாம் எதைக் கற்கிறோம் என்பதுதான் அறிவு. இவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் கடமையுணர்வு கொண்ட குடிமக்களாக நீங்கள் திகழ்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உலக அரங்கில் இந்தியாவை ஒளிரச் செய்வதில், நம் அனைவருக்கும் பெரும் பங்கும், பொறுப்பும் உள்ளது. அதிக பொருளாதார வளர்ச்சி அதிக முன்னேற்றம் ஆகியவற்றை இந்தியா அடைந்துள்ளதால், நம்மிடமிருந்து அதிகமாக கற்றுக்கொள்ளும் ஆவலுடன் உலகம் நம்மை நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியாவின் சகாப்தத்தில் புதிய அத்தியாயத்தை எழுதும் திறமை உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது" என்று பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

21 mins ago

வாழ்வியல்

26 mins ago

ஜோதிடம்

52 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

56 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்