ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே குறும்படப் போட்டி: முதல் பரிசு ரூ.50,000

புதுச்சேரியில் ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகக் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான குறும்படப் போட்டி புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிச.18-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து, ஜனவரி 28-ம் தேதிக்குள் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்.

இது தொடர்பாக பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத் திட்ட இயக்குனர் மற்றும் மாநில காசநோய் அதிகாரி டாக்டர் கோவிந்தராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கிடையே ரத்த தானம் மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகள் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ரத்த தானம் மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக் குறும்படப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 50,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 30,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 20,000 மற்றும் ஆறுதல் பரிசாக 8 நபர்களுக்குத் தலா ரூபாய் 5,000 வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்கள் தங்கள் பெயரை வருகின்ற 18.12.2020 அன்று மாலை ஐந்து மணி வரையில் www.pondicherrysacs.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளளாம். மேலும் 28.01.2021 மாலை ஐந்து மணி வரையில் பதிவு செய்த மாணவர்கள் தங்களுடைய குறும்படப் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம். குறும்படப் போட்டி குறித்து எழும் சந்தேகங்களுக்கு 93454 58145, 90950 99166 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கடந்த நவம்பர் மாதம் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற வினாடி வினாப் போட்டியில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குத் தலா நான்கு ஆயிரம் ரூபாயும், சான்றிதழும் அடுத்த பத்து மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாகத் தலா இரண்டாயிரம் ரூபாயும் சான்றிதழும் விரைவில் வழங்கப்பட உள்ளன.

வினாடி வினா போட்டியில் பரிசு பெற்ற மாணவர்கள் விவரம் www.pondicherrysacs.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது''.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE