கோச்சிங் சென்டரில் இடம் மறுக்கப்பட்ட மாணவி தேர்ச்சி: நீட் தேர்வில் 568 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்

By குள.சண்முகசுந்தரம்

விருதுநகரில் அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்த காரணத்துக்காக தனியார் நீட் கோச்சிங் மையத்தில் இடம் மறுக்கப்பட்ட மாணவி, விடாமுயற்சியால் 568 மதிப்பெண் எடுத்து சாதித்திருக்கிறார்.

விருதுநகர் அருகிலுள்ள சூலக்கரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - உமாமகேஷ்வரி தம்பதியின் 2-வதுமகள் நந்திதா. விருதுநகரில் உள்ளஅரசு உதவிபெறும் பள்ளியான சத்ரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவருக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது சிறு வயது கனவு.

பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண்கள் எடுத்த இவர், 2018-ல்பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,110மதிப்பெண்கள் எடுத்தார். அந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக விருதுநகரிலேயே ஒரு கோச்சிங் சென்டரில் ஒரு மாதம் மட்டும் பயிற்சி எடுத்த நந்திதா, அந்த ஆண்டு நீட் தேர்வில் 177 மதிப்பெண்கள் எடுத்தார். இதையடுத்து அந்த ஆண்டே சென்னையில் உள்ள பிரபல தனியார் நீட் கோச்சிங் சென்டரில் நந்திதாவை சேர்க்க முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு நடந்தவற்றை நந்திதாவின் தாய் உமாமகேஷ்வரி நம்மிடம் விளக்கினார். “நாங்கள் நந்திதாவை சேர்க்க நினைத்த சென்டரில், எங்களை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிட்டனர்கள். காரணம், நந்திதா அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மகள். ‘தமிழ்மீடியத்தில் படித்தவர்களுக்கென தனியான கோச்சிங் சென்டர்கள் இருக்கிறது. அங்கே போய் சேருங்கள்’ என்று எங்களை வெளியேற்றி விட்டார்கள்.

எனினும், திருச்சியில் உள்ள ஒருகோச்சிங் சென்டரில் எங்களுக்கு இடம் தந்தார்கள். அங்கு படித்து2019 நீட் தேர்வில் 378 மதிப்பெண்கள் எடுத்தாள் நந்திதா. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தஎங்களுக்கு அந்த ஆண்டு நீட் கட்ஆஃப் 439 ஆக இருந்ததால் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. இன்னொரு முயற்சி பண்ணிப் பார்க்க நந்திதா விரும்பினார்.

நெல்லையில் உள்ள மற்றொரு தனியார் நீட் அகாடமியில் இடம்கிடைத்தது. அங்கே விடாமுயற்சியுடன் படித்து இந்த வருடம் நீட் தேர்வில் 568 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்.

நீட் கட்டாயம் என்று வந்த பிறகு தமிழ் மீடியம், இங்கிலீஷ் மீடியம், அரசுப் பள்ளி தனியார் பள்ளி என்றெல்லாம் பாகுபாடு காட்டாதீர்கள். அதேபோல், நீட்தேர்வில் வாய்ப்பைத் தவறவிடும்பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் தற்கொலை முடிவுக்குப் போகாதீர்கள். ஒன்றுக்கு மூன்று முறைகூட முயற்சி செய்யுங்கள்; நிச்சயம் உங்களால் ஜெயிக்க முடியும்” என்று உமாமகேஷ்வரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE