கரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றும் முயற்சி: தூத்துக்குடி மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வாழ்வியல் பயிற்சி பட்டறை 

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் 10 நாள் வாழ்வியல் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது.

சூழியல், ஓவியம், ஆங்கிலப் பேச்சாற்றல், கணிதம், கதை, தனித்திறன் குறித்து நிபுணர்கள் ஆன்லைன் மூலம் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கின்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தத் தொடங்கியுள்ளன. ஆனால் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில் மற்ற அரசுப் பள்ளிகளுக்கு முன் உதாரணமாக தூத்துக்குடி மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 10 முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் 10 நாள் வாழ்வியல் பயிற்சிப் பட்டறைக்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயிற்சிப் பட்டறையை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் இன்று மாலை தொடங்கி வைத்தார்.

தினமும் மாலை 4 முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த ஆன்லைன் பயற்சிப் பட்டறையில் சூழியல் வாழ்வு, நவீன ஓவியங்கள், பொழுதுபோக்கு, உயிரியர் பூங்கா சுற்றுலா, 100 ஆண்டுகளுக்கு முந்தைய தூத்துக்குடி நகரின் வாழ்வியல் வரலாறு, ஆங்கில பேச்சு பயிற்சி, குழந்தைகளுக்கான பொது அறிவு, கணிதம், கதை சொல்லி- கதை அறிதல், எதிர்கால திட்டமிடல், தனித்திறன் மேம்பாடு ஆகிய தலைப்புகளில் சூழியல் அறிஞர் சுல்தான், ஓவியர் மருது, வரலாற்று ஆய்வாளர் வே.சங்கர்ராம், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்டோர் பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றனர்.

14 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 200 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். இந்தப் பயிற்சியில் 500 பேர் வரை பங்கேற்கலாம். எனவே விருப்பமும், வசதியும் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் இப்பயிற்சியில் பங்கேற்கலாம் என ஆணையர் ஜெயசீலன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE