பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கேள்விக்கு உடனடித் தீர்வு: தனி ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கிய உ.பி. அரசு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கேள்விக்கு உடனடியாகப் பதிலளிக்கும் வகையில், உ.பி. அரசு பிரத்யேக ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கியுள்ளது.

உ.பி.யில் வரும் 18-ம் தேதி (பிப்.18) தொடங்கி மார்ச் 6-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளை உத்தரப் பிரதேச மத்யமிக் ஷிக்சா பரிஷத் நடத்துகிறது.

இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதற்காக உ.பி. அரசு பிரத்யேக ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேச துணை முதல்வரும் மாநிலக் கல்வி அமைச்சருமான தினேஷ் சர்மா இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. @upboardexam2020 என்பது இதன் முகவரியாகும்.

தேர்வு தொடர்பான சந்தேகங்களைக் கேட்க விரும்பும் மாணவர்கள், #upboardexam2020 என்ற ஹேஷ்டேகுடன் கேள்விகளைக் கேட்கலாம். அவற்றுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டது. இந்தச் சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பாடங்கள் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை மாணவர்கள் 1800-180-5310 மற்றும் 1800-180-5312 என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்களில் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உத்தரப் பிரதேச பொதுத் தேர்வுகளை நேரலையில் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE