கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலுடன் கல்வி கைகோத்து செயல்பட வேண்டும்: சிஐஐ கல்வி உச்சி மாநாட்டில் எம்.பி. பேச்சு

By செய்திப்பிரிவு

கலாச்சாரம் மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் கல்வி கைகோத்து செயல்பட்டால், மாணவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை மேம்படுத்த முடியும் என்று மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) ஒரு பகுதியான சிஐஐ கல்வி (சிஐஐ- எஜிகேஷன்) அமைப்பின் சார்பில் உச்சி மாநாடு, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) வளாகத்தில் நேற்று முன்தினம் (13-ம் தேதி) தொடங்கியது. கல்வி உச்சி மாநாட்டின் இறுதி நாளான நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் ராஜீவ் கவுடா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “மாணவர்களுக்கு தேவையான சிறந்த அறிவிற்காக ஒரு புதுமையான சுற்றுச்சூழல் அமைப்பு கல்வியை நாம் உருவாக்க வேண்டும். கலாச்சாரம் மற்றும் ஒரு புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புடன் கல்வியை கைகோக்க வேண்டும். இதன்மூலம் நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை வாழ்வில் உயர்த்த முடியும்.

அவ்வாறு நாம் செய்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தால் உறுதி செய்ய முடியும்” என்றார். இதனையடுத்து கோல்ட் க்ரெஸ்ட் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக மேலாளர் ரூபாலி சூரி பேசுகையில், “தொழில்நுட்பம் ஒருபோதும் ஒரு ஆசிரியரின் இடத்தை பிடிக்க முடியாது. ஆசிரியர்கள் தங்கள் பணியை திறமையாகவும் புதுமையாகவும் மாற்றுவதற்கான கருவியாகதான் தொழில்நுட்பம் செயல்படுகிறது” என்றார்.

இந்த சிஐஐ உச்சிமாநாட்டில் கல்வியாளர்கள் மற்றும் கல்வித்துறையின் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE