சர்வதேச புல்லாங்குழல் இசை திருவிழா டெல்லியில் இன்று தொடங்குகிறது

புதுடெல்லி

தேசிய மற்றும் சர்வதேச இசை கலைஞர்கள் ஒன்றாக சங்கமிக்கும், 10-வது ‘ராஸ்ரங் சர்வதேச புல்லாங்குழல் திருவிழா டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புல்லாங்குழல் திருவிழாவை, கிருஷ்ணா பிரேர்னா தொண்டு நிறுவனம், இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆர்) மற்றும் சங்கீத நாடக சபா ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இந்த இசை திருவிழாவில், மெக்சிகோ, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த இசை குழுக்கள், உத்தரகண்ட், ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களை சேர்ந்த இந்திய கலைஞர்கள் புல்லாங்குழலில் பல்வேறு இசைக்கோர்வைகளை வாசித்து நிகழ்ச்சி நடத்துகின்றனர். இந்த ஆண்டு நடக்கும் திருவிழாவில், பாரம்பரியமிக்க பழங்கால இசை கருவிகள், பழங்குடியினரின் காற்று இசை கருவிகள், கிட்டார் போன்ற மேற்கத்திய இசை கருவிகளுடன் இணைந்து பல்வேறு நாட்டு இசைக் கலைஞர்கள் கச்சேரி நடத்த உள்ளனர்.

இந்த இசை திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், “ராஸ்ரங் சர்வதேச புல்லாங்குழல் திருவிழா மூலம் புல்லாங்குழல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெய்வீக மயக்கத்தின் ஒரு கருவிதான் புல்லாங்குழல். இதில் வரும் இசையானது உயிர் மூச்சு, தாளம் மற்றும் ஆன்மாவின் மெல்லிசை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தராகண்ட் பகுதியில் இருக்கும் திறமையாக இசைக்கக்கூடிய பழங்குடியினர் மற்றும் நாட்டுப்புற இசை கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர்’’ என்றார்.

மூங்கிலின் பயன்பாடு, அருகி வரும் மூங்கில் இசை கருவிகள் மற்றும் பொருட்களை செய்யும் நபர்களை பற்றியும் இந்த விழாவில் காட்சிப்படுத்தப்படும். அக். 13-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இசை நிகழ்ச்சியில், இந்தியாவின் புல்லாங்குழல் இசை கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற உள்ளனர்.

- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE