அமிர்தசரஸ்: சொத்து குவிப்பு வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் ஓ.பி.சோனியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2016 முதல் 2022 வரை அமைச்சராக இருந்த சோனியின் வருமானம் ரூ.4.52 கோடியாக இருந்த நிலையில், ரூ.12.48 கோடி செலவுக் கணக்கில் காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், வருமானத்தைவிட 176.08 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்ந்ததாக அவர் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோனியை கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்தாண்டு முதல்வராக பகவந்த் மான் பதவியேற்ற பிறகு, இதுவரை மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் நான்கு முன்னாள் அமைச்சர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.