பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் ஒரே அறையில் மூன்று வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சநாயக்கனூர் கிராமத்தில், கூலி தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் 20-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 120 குழந்தைகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.
இப்பள்ளி கருங்கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2007- ம்ஆண்டு பள்ளியின் மேற்கூரைகள் புனரமைக்கப்பட்டன. இப்பள்ளியில் நான்கு அறைகள் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு வகுப்பறையிலும் மூன்று வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பாடம் கற்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் குழந்தைகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. அவர்களுக்கு விளையாட்டு மைதானமும் இல்லாததால் பள்ளியில் முன்புறம் உள்ள சிமென்ட் தரையில் விளையாடி வருகின்றனர். புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.