டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுள்ளதாக மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பஸ்தியை சேர்ந்தவர் லலித். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டுக்கு, 20 பேர் அடங்கிய கும்பல் வந்தது. லலித்தின் சகோதரிகள் பிங்கி(30) மற்றும் ஜோதி (29), இருவரையும் அந்தக் கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இந்த கொலை வழக்கில் அருண் மற்றும் மைக்கேல் உட்பட 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துஉள்ளனர். இதேபோல், டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள ஆர்யபட்டா கல்லூரியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் நிகில் சவுகான் என்பவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இந்தப் படுகொலைகள் குறித்து, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
‘டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மக்கள்யாரும் பாதுகாப்பாக இல்லை. 19 வயது மாணவர் கல்லூரிக்கு வெளியே தனது பெண் தோழியுடன் நின்றபோது, சிலர் அவளைத் துன்புறுத்தியுள்ளனர்.
மாணவர் தனது தோழியை காப்பாற்ற முயன்றபோது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சம்பவத்தில் இரண்டு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டெல்லியில் என்ன நடக்கிறது? மத்திய அரசும் டெல்லி அரசும் இணைந்து, நடவடிக்கை எடுத்து நிலைமையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு சுவாதி மாலிவால் கூறினார்.