மின்னணு யுகக் கல்வியின் பெரும்
பகுதி இன்ஸ்டன்ட் காபி போன்றது.
குழந்தைகளின் கவனத்தைக் குவிக்கும்
காலநேரம், இப்போது வெறும் மூன்று நிமிடங்களாகச் சுருங்கிவிட்டது. - ஜொனதன் ஹெயிட்
ஒரு காலத்தில், குழந்தைகளின் கவனக் குவிப்பு 40 நிமிடங்கள்வரை தாக்குப்பிடிக்கும் எனக் கருதப்பட்டது. அதுவே திறன்பேசி ரீல்ஸ் நீளக்கூடிய மூன்று நிமிடமாக இன்றைக்கு அது குறுகிவிட்டது. இந்த உண்மையை உணராமல் வகுப்பறைக்குள் சிக்கிக்கொள்ளும் ஓர் ஆசிரியர் எப்படி இந்தச் சந்ததியைச் சமாளிக்க முடியும்? இதற்கான பதில்தான், ‘பதற்றமான தலைமுறை’ (The Anxious Generation) நூல்.
நூலாசிரியர் ஜொனதன் ஹெயிட், நியூயார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் வணிக பள்ளியைச் சேர்ந்த சமூக உளவியல் பேராசிரியர். ‘ஜென் ஆல்ஃபா’ எனப்படும் மின்னணு யுகக் குழந்தைகளுக்குத் துரித உணவுபோலக் கல்வியும் துரித வகையாக மாறிப்போன அவலத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறையையும் ஜொனதன் ஹெயிட் அலசுகிறார்.
குறுந்திரை, குறுகிய கவனம்: வெட்டவெளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகள் தற்போது மெய்நிகர் காணொளி விளையாட்டுகளாக மாறிவிட்டன. சுதந்திரமாக வெளியில் சென்று விளையாடி, பலரிடம் நட்பு கொள்ளும் சமூக மனித உருவாக்கம் தற்போது பெரும்பாலும் நடப்பதில்லை.
வீட்டின் ஒரே குழந்தை, பெற்றோரின் தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் இந்தச் சந்ததி சிக்கிக்கொண்டிருக்கிறது. அதேநேரம் நிஜமான வெளி உலகில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் ஒரு குழந்தை இணைய உலகுக்குள் என்ன செய்கிறது, எந்த மாதிரியான சமூக ஊடக மனிதர்களுடன் உறவாடுகிறது என்பதை யாரும் கண்காணிப்பதில்லை.
குறுந்திரை ஊடக நிகழ்ச்சிகள் (Reels, Shorts), எதிலும் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு உளவியல் தாக்கங்களை இளையோர் மீது ஏற்படுத்தி உள்ளன. ஒரு ரீல்ஸை பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுவாரசியம் இல்லை எனில் உடனடியாகத் தொடுதிரையில் கை வைத்து அதை நகர்த்திவிடும் பொறுமையற்ற சமூகத்தை உருவாக்கிவிட்டோம்.
இந்த நிலையில் ஓர் ஆசிரியர் 40 நிமிடங்கள் ஒரே பாடத்தை நடத்துவதை இந்தச் சந்ததி எப்படி ஏற்றுக்கொள்ளும்? 2010ஆம் ஆண்டுக்கு பிறகு திறன்பேசிகள் அதிக அளவில் பரவலானதில் இருந்து இளம் தலைமுறை டிஜிட்டல் உறவுகள், கவலை, மனச்சோர்வு, எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியின்மை போன்ற சிக்கல்களுக்குள் ஆழப் புதைந்துவிட்டது என்கிறார் நூலாசிரியர்.
'டெக்ஸ்ட் சமூகம்' - அதிலும் திறன்பேசி வழியாகக்கூடப் பேசுவதைத் தவிர்த்து விட்டு ‘டெக்ஸ்ட்’ செய்வதை வாடிக்கையாகக் கொண்டி ருக்கும் தலைமுறையாக இது மாறிவிட்டது. ஆகையால் ‘டெக்ஸ்ட் சமூகம்' என்றே இன்றைய குழந்தைகளை நூலாசிரியர் அழைக்கிறார்.
நிலைமை இப்படி இருக்க, முந்தைய காலக் குழந்தைப் பருவச் சூழலுக்கும் ஆல்ஃபா சந்ததியினரின் சூழலுக்கும் இடையிலான வேறுபாட்டை உணராத ஜடப்பொருளாக நம் கல்விமுறை உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் என்ன மாதிரியான தேர்வுகள் நடத்தப்பட்டனவோ, பாடநூல்கள் சார்ந்து எவ்வாறு கல்விச் செயல்பாடு இருந்ததோ, அதையே இன்றைக்கும் நம் கல்விமுறை முன்மொழிகிறது.
நிதர்சனத்தில், நெட்டிசனாக இருக்கும் ஆசிரியர் மட்டுமே இன்றைக்கு மதிக்கப்படுவார் என்கிறார் நூலாசிரியர். குரலை உயர்த்திப் பேசாதே, கவனி என்று ஓர் ஆசிரியர் வகுப்பறையில் எத்தனை முறை கூறினாலும் மூன்று நிமிடங்களுக்கு மேல் மாணவர்களே நினைத்தாலும் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்க அவர்களால் முடியாது.
எனவே, மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை நடத்தும் பாடத்தின் தலைப்பையோ, சொல்லும் விதத்தையோ மாற்றவேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டு உள்ளது. ஒரு பாடத்தைப் படமாக, கதையாக, நிகழ்த்துக்கலையாக உருமாற்றி எடுத்துரைத்தால் மட்டுமே ’ஜென் ஆல்ஃபா’வின் கவனத்தை ஆசிரியர் ஈர்க்க முடியும்.
அதுமட்டுமல்ல பாடம் நடத்தும்போது அதை திறன்பேசியில் ஒளிப்படம் அல்லது காணொளியாக எடுத்து குழந்தை வீட்டுக்குச் சென்ற பிறகு, அதை ரீல்ஸ் முறைக்கு மாற்றி அனுப்புவது நடைமுறைக்கு வரவேண்டும். இப்படியான 100 வழிமுறைகளை இந்நூல் முன்வைக்கிறது. வாசிப்போம், விவாதிப்போம்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com