கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வனத் துறை நேற்று முதல் நீக்கி அனுமதி அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலமான பேரிஜம் ஏரிப் பகுதியில் சில தினங்களுக்கு முன் யானைகள் நடமாட்டம் இருந்தது.
இதனால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்திருந்தனர். பேரிஜம் ஏரிப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், யானைகள் கூட்டம் அங்கிருந்து வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தது. சுற்றுலாப் பயணிகளுக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கியதையடுத்து வனத் துறையினர் மீண்டும் அனுமதி அளித்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளநிலையில் பேரிஜம் ஏரிக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.