இலக்கு ஒன்று... பலன்கள் பல... | உலக சுற்றுலா தினம் சிறப்புப் பகிர்வு

By எல்லுச்சாமி கார்த்திக்

வானிலிருந்து தரையில் ஆர்ப்பரித்து விழும் அருவியை போன்றது தான் சுற்றுலா. மனிதர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் அருமருந்து அது. தனியாக, குடும்பத்துடன், நண்பர்களுடன், குழுவாக என அனைவரும் சுற்றுலா செல்வது வழக்கம். சுற்றுலா நிமித்தமாக நிலம், நீர் மற்றும் ஆகாய மார்க்கமாக வானூர்தியில் ‘பறவையாக பறந்து’ பயணிக்க வேண்டி இருக்கும். என்ன உலா போக நேரமும் காலமும் தான் கூடி வர வேண்டும்.

இத்தகையச் சூழலில் இன்று (செப்.27) உலகம் முழுவதும் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளின் சிறப்பு குறித்து விரிவாக பார்க்கலாம். பொதுவாக சுற்றுலா செல்ல நிதி ஆதாரம் தேவை. இருந்தாலும் அது இரண்டாம் பட்சம்தான். சுற்றுலா செல்ல முதலில் மனதில் விருப்பம் வேண்டும். இந்தியாவின் பிஹார் மாநிலத்தை சேர்ந்த நோமட் ஷுபம் எனும் இளைஞர் லிஃப்ட் கேட்டே உலகம் முழுவதும் சுற்றி வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த விஜயன் - மோகனா தம்பதியர் 26 நாடுகளுக்கு சுற்றுலா நிமித்தமாக சென்று வந்துள்ளனர். அவர் அதே பகுதியில் தேநீர் கடை ஒன்று நடத்தி வந்தார். கடந்த 2021 வாக்கில் விஜயன் காலமானார்.

சுற்றுலா: பொதுவாக சுற்றுலா செல்வதே வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து சில நாட்கள் பிரேக் எடுத்துக் கொள்ள தான். இந்த பிரேக் புத்துணர்வுடன் மீண்டும் தங்களது பணியில் சோர்வின்றி துடிப்போடு இயங்கச் செய்யும். அதில் சில சுற்றுலா பயணங்கள் முன்கூட்டியே திட்டமிட்டதாக இருக்கும். சில எந்தவித திட்டமும் இல்லமால் மேற்கொண்டதாக இருக்கும். ஆன்மிக சுற்றுலா, இன்பச் சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா, தேர்தல் சுற்றுலா என பல்வேறு வகையிலான சுற்றுலாக்கள் உள்ளன. காற்றில் பறவையை போல பறக்க விரும்பும் சாகசப் பிரியர்களுக்கு என அது சார்ந்த சுற்றுலா பயணங்களும் உள்ளன. சிலர் சுத்தமான காற்றை சுவாசிக்க கூட சுற்றுலா செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இதன் நோக்கம் அனைத்தும் புதிய அனுபவத்தை பெறுவது.

பல்வேறு மொழிகள் பேசப்படும் இந்தியாவில் வெவ்வேறு மாநிலத்தின் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதும் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். உதாரணமாக தெற்கே மினி பிரான்ஸ் என சொல்லப்படும் புதுச்சேரி, வடக்கே உள்ள காஷ்மீர், மேற்கே உள்ள குஜராத் மற்றும் கிழக்கே உள்ள அருணாச்சலப் பிரதேசம் என ஒவ்வொரு இடத்தின் பயணமும் வெவ்வேறு விதமான அனுபவத்தை கொடுக்கும். இது தவிர உலக நாடுகளும் உள்ளன. புதிய மொழி, புதிய மக்கள், புதிய இடம் என அந்த அனுபவம் ரொம்பவே அலாதி ஆனது. சுற்றுலா செல்ல சில வங்கிகளில் கடன் கூட கொடுக்கப்படுகிறது.

ஆதிகாலத்தில் வாழ்ந்த மூத்த குடிமக்கள் உணவுக்காக ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நாடோடியாக நடைபயணம் மேற்கொண்டார்கள் என சொல்வதுண்டு. மனித நாகரிகம் மெல்ல வளர்ந்த பிறகு அந்த நடைப்பயணம் வாழ்வாதாரத்திற்காகவும், பொருளுக்காகவும் மாறியுள்ளது. இப்படி மனிதர்களின் ஜீனில் பயணம் என்பது இரண்டறக் கலந்துள்ளது.

முக்கியமாக ஒரு நாட்டின் மற்றும் அதன் மக்களின் பொருளாதார ஆதாரமாகவும் சுற்றுலா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த துறை செழுமையான வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.

சுற்றுலா தினச் சிறப்பு: இப்படி பேரின்பத்தின் பேர் ஊற்றாக இருக்கும் சுற்றுலாவை கொண்டாடும் வகையில் கடந்த 1980 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ம் தேதி அன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு இதனை முடிவு செய்தது. இதனை ஒருங்கிணைப்பதும் அந்த அமைப்பு தான்.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகிற்கு சுட்டிக்காட்டும் வகையில் இந்த நாள் அமைந்துள்ளது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சுற்றுலா ஏற்படுத்தும் தாக்கத்தை சுட்டிக்காட்டும் வகையில் இந்த நாள் அமைந்துள்ளது. 90-களின் இறுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகள் இந்த நாளை ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்புடன் இணைந்து கொண்டாடி வருகின்றன.

நடப்பு ஆண்டில் இந்தோனேசியா இந்த நாளை உலக சுற்றுலா அமைப்புடன் இணைந்து கொண்டாடுகிறது. ‘Rethinking Tourism’ என்ற கருப்பொருளின் கீழ் காலநிலை மாற்றத்தை மையமாக வைத்து இந்த கொண்டாட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வும் கொடுக்கப்படுகிறது. ஐ.நா சபையில் சுற்றுலா குறித்த சிறப்பு விவாதம் நடந்தது. சுற்றுலாவில் காலநிலை விழிப்புணர்வுக்கான நடவடிக்கை குறித்த 2021 கிளாஸ்கோ மாநாட்டு அறிவிப்பும் இதற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 2019-ல் உலக சுற்றுலா அமைப்புடன் இணைந்து தினம் கொண்டாடப்பட்டது. ‘சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு: எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் அந்த கொண்டாட்டம் அமைந்திருந்தது.

மீண்டு வரும் சுற்றுலாத் துறை: கரோனா பெருந்தொற்று பொதுமுடக்கத்தின் போது சுற்றுலாத் துறை பெரிய அளவில் முடக்கத்தை எதிர்கொண்டது. இந்நிலையில், இப்போது அந்த சூழல் மெதுவாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்தியர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும். அதேபோல வெளிநாட்டினர் இந்தியா வருவதுமாக உள்ளனர். சில நாடுகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கொள்கை அளவிலான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஜெர்மன் சுமார் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. அண்மையில் பூட்டான் நாட்டின் எல்லைகள் சுற்றுலாவுக்காக சுமார் 30 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. இப்படியாக சுற்றுலாத் துறை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அது உலா செல்பவர்களுக்கு குஷியான செய்தி. மொத்தத்தில், சுற்றுலா என்பதும் ஓர் இலக்குதான். ஆனால், அதன் பல்வேறு நோக்கங்களால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ஆம், சுற்றுலா செல்பவர் மற்றும் அதையே தொழிலாக நம்பி இருப்பவர் என அனைத்து தரப்புக்கும் ஆதாயம்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

கல்வி

48 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்