நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இரவில் இருந்து காலை வரை பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் அடித்து வருகிறது. இந்நிலையில், சபரிமலை சீஸன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாலும், பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடர் விடுமுறையால் சுற்றுலா திட்டம் வகுத்தவர்கள் இன்றே கன்னியாகுமரியில் குவிந்தனர். இதனால் கன்னியாகுமரி, மற்றும் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை உட்பட பிற சுற்றுலா மையங்களிலும் நேற்றே கூட்டம் அலைமோதியது.
பனி மூட்டத்திற்கு மத்தியில் இன்று அதிகாலையிலேயே கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயம் பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சூரியன் உதயமாகும் காட்சியை செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைப்போல் படகில் விவேகானந்தர் பாறை சென்று அங்கிருந்து கண்ணாடி இழை பாலத்தில் நடந்து திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்றனர். தொடர்ச்சியாக பண்டிகை விடுமுறை வருவதால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை கன்னியாகுமரியில் பல லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.