மதுவிலக்கை தீர்மானிக்கும் அதிகாரத்தை கிராமசபைகளுக்கு வழங்க வேண்டும் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராம மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். தமிழக வரலாற்றில் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஒருவர் பங்கேற்றது இதுவே முதல்முறை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது வரவேற்கத்தக்கது.
கூட்டத்தில், கிராம சுயராஜ்ஜியம் குறித்தும், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் முதல்வர் பேசியுள்ளார். கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நல்ல தொடக்கமாக இதை கருதலாம். அதேநேரம், கிராமங்களுக்கு தங்கள்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரமும், தேவையற்ற தீமைகளை கிராமங்களுக்குள் அனுமதிக்க விடாமல் தடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான கிராம சுயராஜ்ஜியம்.
ஒட்டுமொத்த தமிழகமும், குறிப்பாக கிராமப்புறங்கள் தற்போது எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை மதுதான். மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் இன்றைய தலைமுறை சீரழிவது குறித்தும் பலமுறை கூறிவிட்டேன். ஆனாலும் மதுவின் தீமையில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆட்சியாளர்கள் மனதளவில் நினைத்துக்கூட பார்ப்பது இல்லை.
குடும்பங்கள் சீரழிய மதுவே காரணம்
கரோனா காலத்தில் குடும்பங்களின் வருவாய் குறைந்தாலும், மது அருந்துவதற்கான செலவுகள் குறையவில்லை. அதனால், பல லட்சம் குடும்பங்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் பசியால் வாடுகின்றனர். கிராமப்புறங்களில் வாழும் பெண்கள்தான் மதுவின்தீமைகளை தினமும் அனுபவிக்கின்றனர்.
கள்ளச் சாராயம் பெருகிவிட கூடாது என்பதற்காகவே அரசு மது விற்பதாக கூறும் அரசு நிர்வாகங்கள், இதுதொடர்பான நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கு முன்புகிராமப்புற பெண்களின் மனநிலை, கருத்துகளை அறிய வேண்டும். அதுதான் உண்மையான மக்களாட்சி தத்துவம். அதற்கான சிறந்த வாய்ப்பை தமிழக அரசுக்கு கிராமசபைகள் வழங்குகின்றன.
மதுவை கொடுத்து குடும்பங்களை சீரழித்துவிட்டு, பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்குவதால் யாருக்கும் பயனும்இல்லை. மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பாமக தெரிவித்திருக்கிறது. இதில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்க பாமக தயாராக உள்ளது.
மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியம். எனவே, கிராமப் பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனே கிராமசபைகளை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.