மத்திய அரசே 75 சதவீத தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நாட்டில் தயாரிக்கப்படும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு கட்டணமின்றி விநியோகிக்கும்” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
மாநில அரசுகள் கோரியபடியே தடுப்பூசி கொள்முதலில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதையும் பாராட்டுகிறேன்.
சுகாதாரம் மாநிலப் பட்டியலின் கீழ் இருக்கிறது என்று பிரதமர் தன்பேச்சில் பலமுறை சுட்டிக்காட்டி இருப்பதால், அனைத்து தரப்புமக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வது, சான்றிதழ் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்திலும் மாநில அரசுகளுக்கே முழு சுதந்திரம் அளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு முதல்வர் அதில் தெரிவித்துள்ளார்.