TNadu

‘கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது' :

செய்திப்பிரிவு

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தற்போது உருமாறிய கரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி போட அனுமதிவழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு முறையாக அமல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

எனவே தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடவும், தனியார் மருத்துவமனையில் தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சிறப்பாக உள்ளன. கரோனா பரவலைத் தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறி விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT