தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரை புறப்பட்ட பாஜக தலைவர் முருகன் உட்பட 500 பேர் கைது தடையை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரை புறப்பட்ட தமிழக பாஜக தலைவர் முருகன், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நவ.6-ம் தேதி திருத்தணியில் தொடங்கி, டிச.6-ம் தேதி திருச்செந்தூர் வரை தமிழகத்தில் ‘வெற்றிவேல் யாத்திரை’ நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்தார். ஆனால், கரோனா வைரஸ் 2-வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.

ஆனாலும் தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று எல்.முருகன் அறிவித்தார். அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று காலை திறந்த வேனில் கையில் வேல் ஏந்தி திருத்தணிக்கு அவர் புறப்பட்டார். பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உட்பட ஏராளமானோர் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் திருத்தணிக்கு புறப்பட்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முருகன், “அரசியல்சாசனப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வழிபாட்டு உரிமை உள்ளது.அதனால் முருகனை வழிபட திருத்தணி புறப்பட்டுச் செல்கிறேன்” என்றார். முருகன் உள்ளிட்டோரின் வாகனங்களை பூந்தமல்லி அருகே நசரேத்பேட்டையில் தடுத்து நிறுத்திய சென்னை பெருநகர காவல் துறையினர் 5 வாகனங்களை மட்டுமே திருத்தணிக்கு செல்ல அனுமதித்தனர்.

திருத்தணிக்கு வந்த எல்.முருகன் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து வேல் யாத்திரை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து கையில் வேல் ஏந்தி திறந்த வேனில் பகல் 12.20 மணி அளவில் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திறந்தவேனில் யாத்திரை தொடங்க திருத்தணி பை-பாஸ் ரவுண்டானா பகுதிக்கு பகல் 1.20 மணிக்கு வந்தார்.

அங்கு திறந்த வேனில் இருந்தவாறு பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேசினர்.

நிறைவாக பேசிய எல்.முருகன், “திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆரம்பகாலம் முதலேஇந்து கடவுள்களுக்கும், தமிழ் கடவுள்களுக்கும் எதிராக இருந்து வருகின்றனர். இந்துக்களை சீண்டுவதும், மத உணர்வுகளை கேலி செய்வதும், ஏளனம் செய்வதுமே திமுகவின் வேலையாக உள்ளது. அவர்கள் கடவுள் இல்லை என்கின்றனர். நாம் யாரை கும்பிட்டால், அவர்களுக்கு என்ன? நான் விரும்பும் கடவுளை கும்பிடுவதை தடுக்கும் உரிமை திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடையாது. கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனலுக்கும் திமுகவுக்கு தொடர்பு உள்ளது. அவர்களுக்கு திமுகவினர் தான் சட்ட உதவிகளை செய்து வருகின்றனர்” என்றார்.

போலீஸார் குவிப்பு

தொடர்ந்து முருகன் உள்ளிட்டோர் தடையை மீறி வேல் யாத்திரை புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் முருகன், சி.டி.ரவி,பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்து 2 தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பாஜகவின் இந்த யாத்திரையை தடுத்து நிறுத்தவும், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கவும் திருவள்ளூர் மாவட்டகாவல் துறை எல்லை பகுதிகளில், வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்,காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி, திருவள்ளூர் எஸ்.பி.அரவிந்தன் மற்றும் 2 ஏடிஎஸ்பிக்கள், 12 டிஎஸ்பிக்கள், 39 ஆய்வாளர்கள், 88 எஸ்.ஐ.கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 1,400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேல் யாத்திரை பரபரப்புக்கு இடையே மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி,ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் கைது செய்த காவல் துறையினர் மாலையில் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

28 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்