இளையான்குடி அருகே இரவில் கூட்டமாக விளை நிலங்களில் மாடுகள் புகுவதால், 20 கிராமங்களில் விவசாயம் அழிந்து வருவ தாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இளையான்குடி அருகே பூலாங்குடி, சாத்தனூர், சீவலாதி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட 20 கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இப்பகுதிகளில் இரவு நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் ஒரே சமயத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. ஒரே சமயத் தில் ஏராளமான மாடுகள் வருவதால் அவற்றை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. மாடுகள் தொல்லையால் 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து சாத்தனூர் விவசாயி கதிரேசன் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு வழிதவறி வந்த சில மாடுகள் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் காட்டுக்குள் திரிந்தன.
அவை தற்போது பல்கிப் பெருகி 500-க்கு மேல் உள்ளன. அவை இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
ஒரே சமயத்தில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் வருவதால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் எங்களால் விவசாயமும் செய்ய முடியவில்லை. அவற்றை பிடித்து கோசாலையில் விட வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago