வகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சூராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் பிரசவம் பார்க்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு எளிதில் செல்ல முடியாத மக்களுக்கு மருத்துவ வசதி அளிக்கும் வகையில் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி மலைப் பிரதேசங்களில் 20 ஆயிரம் பேருக்கும், மற்ற இடங்களில் 30 ஆயிரம் பேருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு மருத்துவர் பகல் நேரத்திலும், 4 செவிலியர்கள் ஷிப்டு முறையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
மேலும் இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்பட வேண்டும். இளையான்குடி அருகே சூராணம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சூராணம், சொக்கப்படப்பு, கீறுகுடி, கலங்கா தான்கோட்டை, ஆக்கவயல், நானாமடை, விசவனூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
திருப்பி அனுப்பியதால் சிரமம்
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரவு நேரங்களில் பிரசவத்துக்கு செல்வோரை மருத்துவர், செவிலியர் இல்லை என கூறி திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. இதனால் பிரசவத்துக்காக செல்லும் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து கோடியக்கரையைச் சேர்ந்த காட்டுராஜா என்பவர் கூறியதாவது: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிரசவம் பார்க்க முடியாது எனக் கூறி, 2 கர்ப்பிணிப் பெண்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் செவிலியர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். பிரசவத்துக்கு கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டதும் மருத்து வரையும் வரவழைக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் மருத்துவர், செவிலியர் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்புகின்றனர். மேலும் பிப்.7-ம் தேதி எனது தாயார் முத்துபிள்ளையை பாம்பு கடித்து விட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றபோது செவிலியர் இல்லாததால் முதலுதவி கூட செய்யவில்லை. பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினோம்.
கடந்த சில மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் செவிலியர்கள் பணியில் இருப்பதில்லை. இதுகுறித்து கேட்டால் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறி சமாளிக்கின்றனர் என்று கூறினார்.
இதுகுறித்து சுகாதார துணை இயக்குநர் யசோதாமணியிடம் கேட்டபோது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் செவிலியர் பணியில் இருக்க வேண்டும். பணியில் இல்லாதது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago