திண்டுக்கல் அருகேயுள்ள நல்லம நாயக்கன்பட்டியில் புனிதவனத்து அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
கோட்டாட்சியர் உஷா ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார். நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், ஒன்றியத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 574 காளைகள் மற்றும் 270 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
கரோனா பரிசோதனை, உடல் தகுதி சரிபார்க்கப்பட்டு அதன்பிறகே மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக முதலில் ஆலயக் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், கட்டில், சில்வர் பாத்திரங்கள், ஆட்டுக்குட்டிகளை பரிசாக வழங்கினர்.
காளைகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர். லேசான காயமடைந்தவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முகாமில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
பலத்த காயமடைந்த 3 பேரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சுற்றுவட்டார கிராமங் களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஜல்லிக்கட்டை பார்வையிட திரண்டனர்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்குச் சென்று வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்த இடத்தைப் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago