சந்தை இடமாறியதால் வியாபாரிகள் போராட்டம் காய்கறிகள் வாங்க முடியாமல் திருப்பத்தூர் மக்கள் சிரமம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். சந்தை நடக்காததால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

திருப்பத்தூரில் பேரூராட்சி அலுவலகம் அருகே வாரம்தோறும் சனிக்கிழமை சந்தை நடந்து வருகிறது. இந்நிலையில் வாரச்சந்தையைச் சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, கடந்த வாரம் வாரச்சந்தையை தற்காலிகமாக மதுரை சாலையில் திரையரங்கு எதிரே உள்ள இடத்துக்கு மாற்றியது.

ஆனால் வியாபாரிகள் புதிய இடத்துக்குச் செல்ல மறுப்பு தெரிவித்து பழைய இடத்திலேயே வழக்கம்போல் கடைகளை நடத்தினர். இதற்கிடையில் நேற்று முன்தினம் சீரமைப்புப் பணிக்காக சந்தையில் இருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் இடித்தது. இதனால் அங்கு கடைகளை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று புதிய இடத்தில் கடைகளை அமைக்க வியாபாரிகள் மறுப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பழைய சந்தை இடத்துக்கு அருகிலேயே இடம் ஒதுக்கி தருவதாக பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனர். மேலும் வாரச்சந்தை நடக்காததால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்