Regional04

ஆரணியில் - இலங்கை தமிழர்கள் மறியல் :

செய்திப்பிரிவு

ஆரணியில் பழுதடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மில்லர் சாலையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு, 108 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர் மழை காரணமாக மேற்கூரைகளில் இருந்து தண்ணீர் கொட்டுவதால் வசிக்க முடியாத நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முகாம் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி-வந்தவாசி சாலையில் 200-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்த நகர காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால், போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். அப்போது, அங்குசென்ற திமுக வடக்கு மாவட்ட பொறுப் பாளர் தரணிவேந்தன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுடன் விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இலங்கை தமிழர்களின் மறியல் காரணமாக சுமார் 2 மணி நேரம் ஆரணி-வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT