தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சார்பில் காஜு கட்லீ, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜு பிஸ்தா ரோல், காபி மில்க் பர்பி என 5 இனிப்பு வகைகளின் விற்பனையை பால்வளத் துறை அமைச்சர் கடந்த 11-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ஆவின் பால் விற்பனை, பால் உபபொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விற்பனை குறித்து அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர்களிடம் அமைச்சர் சா.மு.நாசர், சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, “தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளை அன்பளிப்பாக யாரும் எதிர்பார்க்க வேண்டாம். அனைவரும் விலை கொடுத்துதான் இனிப்புகளை வாங்க வேண்டும். தீபாவளி இனிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியின்போது, இனிப்புகளை விலை கொடுத்துதான் நான் வாங்கினேன்.
அதேபோல, ஆவினின் அனைத்து அலுவலர்களும் இனிப்புகளை விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் இனிப்புகள் வழங்கியதில் நடந்த தவறுகள் இந்த ஆண்டு நடைபெறவே கூடாது. தவறுகள் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆவின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.