விதிகளை மீறி திருமண மண்டபங்களில், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது என நடுத்தர பட்டாசு வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பட்டாசு வியாபாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். கடைகள் அமைக்க காவல், தீயணைப்பு, உளவுத்துறையினர் கள ஆய்வு நடத்தி தடையின்மை சான்று வழங்கிய பின்னர், காவல்துறையினரால் உரிமம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படுவதாக பட்டாசு வியாபாரிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த பட்டாசு வியாபாரிகள் சிலர் கூறும்போது, ‘‘நடுத்தர வியாபாரிகளான நாங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும் முதலீடு செய்து பட்டாசு கடைகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசு வெடிபொருள் சட்டம் 2008 பிரிவு 84-ன் படி, 9 ச.மீ. முதல் 25 ச.மீ. வரை பரப்பளவில் மட்டுமே தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட வேண்டும்.
காலி இடத்தில் பட்டாசு கடை அமைக்கும்போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் இருக்க வேண்டும். திருமண மண்டபங்கள், அரங்கங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் ஆகிய கட்டிடங்களில் பட்டாசு கடை அமைக்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு விதிகள் உள்ளன. ஆனால், கோவையில் அரசின் விதிகளை மீறி திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், காலியிடங்களில் கடைகள் அமைக்க பலர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் பட்டாசு கடைகள் அமைக்க பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விதிகளை மீறி அமைக்கும் இவர்களால் நடுத்தர வர்க்க பட்டாசு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இவர்களுக்கு அனுமதி வழங்ககூடாது’’ என்றனர். இக்கோரிக்கை தொடர்பாக, பட்டாசு வியாபாரிகள் தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘சட்ட விதிகளின்படி, முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. விதிகளை மீறி உரிமம் வழங்குவதில்லை’’ என்றனர்.