Regional03

கோயிலை திறக்க கோரி போராட்டம் இந்து முன்னணியினர்-போலீஸார் வாக்குவாதம் :

செய்திப்பிரிவு

மகாளய அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் நடத்திய போராட்டத்தில், போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் வைகை ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பரிகாரத்தலமான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க மக்கள் திரண்டனர்.

ஆனால் கோயிலுக்கு சென்று வழிபட யாரையும் அனுமதிக்கவில்லை. முன்னதாக கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வந்திருந்த மக்கள் ஆற்றின் கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து சென்றனர்.

இந்நிலையில் கோயிலை திறக்கவேண்டும் எனக் கோரி இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கோயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் போலீஸாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோயிலுக்கு செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, பாரதிய ஜனதா மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு கோயிலின் முன்கதவை மட்டும் திறந்துவிட்டனர். இதனால் வெளியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT