தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 25 பேர் தனியார் சுற்றுலா வாகனம் மூலம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். இந்த வாகனத்தை வாணியம்பாடியைச் சேர்ந்த சலீம் (50) என்பவர் ஓட்டிச் சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநரான கோபால் (51) என்பவரும் உடன் சென்றார். சுற்றுலாவை முடித்துக் கொண்ட இக்குழுவினர் நேற்று முன் தினம் இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டமேடு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் சுற்றுலா வாகனம் மோதியது. விபத்தில், வேனில் பயணம் செய்த பரத் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேன் ஓட்டுநர்கள் மற்றும் வாகனத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 17 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தொப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.