Regional03

முழு ஊரடங்கின் அவசியம் குறித்து தருமபுரி ஆட்சியர் அறிவுரை :

செய்திப்பிரிவு

முழு ஊரடங்கின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் நடந்த இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள், முழு ஊரடங்கின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் விவாதித்தார். பின்னர் ஆட்சியர் பேசியது:

கரோனா தொற்று பரவலின் தீவிரத்தை தடுத்து, உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கத்துக்காகவே முழு ஊரடங்கை அரசு அறிவித் துள்ளது. எனவே, அரசு அதிகாரிகளும், பணியாளர்களும் ஒருங்கிணைந்து முழு ஊரடங்கை செயல்படுத்த வேண்டும். மேலும், மருத்துவம் உள்ளிட்ட மிக அவசிய தேவைகளுக்காக செல்பவர்களுக்கு அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கலாம். இதுதவிர, அவசியமின்றி வெளியில் நடமாடுவோருக்கு முழு ஊரடங்கின் முக்கியத்துவம் குறித்து காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி திருப்பி அனுப்ப வேண்டும். சுற்றித் திரிவதற்காகவே வெளியில் வரும் நோக்கம் கொண்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்தக் கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவள்ளி, மருத்துவர் இளங்கோவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT