வேதாரண்யம் கடற்பகுதியில் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்த செருதூர் மீனவர்களின் வலையில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று சிக்கியது.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன்(37) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென் றனர். வேதாரண்யத்துக்கு கிழக்கே 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களின் வலையில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், அந்த ராக்கெட் லாஞ்சருடன் உடனடியாக கரைக்கு திரும்பினர்.
இதுகுறித்து கிராம பஞ்சாயத் தார் கொடுத்த தகவலின்பேரில், கீழையூர் கடலோர காவல் குழும போலீஸார் அங்கு சென்று, ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.