தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பதிவான பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் 28 ஆயிரத்து 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) என மொத்தம் 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. தமிழகத்திலேயே பாலக்கோடு தொகுதியில் தான் அதிக வாக்குகள் பதிவானது. இந்தத் தொகுதியில், 87.37 சத வீதம் வாக்குகள் பதிவாகின. எனவே, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி தமிழக அரசியல் களத்தை தன்பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது. இத்தொகுதியில், உயர் கல்வித்துறை துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். திமுக சார்பில் வழக்கறிஞர் பி.கே.முருகன் போட்டியிட்டார்.
நேற்று முன் தினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாலக்கோடு தொகுதி நிலவரம் பலராலும் உற்று கவனிக்கப்பட்டது. முதல் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், அடுத்தடுத்த சில சுற்றுகள் வரை அதிமுக-திமுக வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்குகள் வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. 5-வது சுற்றில் மட்டும் திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 257 வாக்குகள் முன்னிலை வகித்தார். அதன்பிறகான சுற்றுகளில் மீண்டும் அதிமுக வேட்பாளர் முன்னிலை பெறத் தொடங்கினார். 25-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று 28 ஆயிரத்து 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பி.கே.முருகன் 81 ஆயிரத்து 970 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
அதிக வாக்குப்பதிவு நடந்ததன் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாலக்கோடு தொகுதியின் எம்எல்ஏ-வாக தற்போது தேர்வாகியுள்ள கே.பி.அன்பழகன் அதே தொகுதி யில் தொடர்ந்து 5-வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.