அதிவேகமாக வந்த லாரி மோதியதால் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இளைஞருக்கு ரூ.10.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என லாரியின் உரிமையாளர், காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மதுக்கரையை அடுத்த திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எம்.கார்த்திக் (32). தனது இருசக்கர வாகனத்தில் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் வெள்ளலூர் பிரிவு அருகே கடந்த 2017 பிப்ரவரி 2-ம் தேதி சென்றார். அப்போது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கார்த்திக்கின் வலது கால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. விபத்து நடந்தபோது கார்த்திக் கோவையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் ஈட்டி வந்துள்ளார். பகுதி நேரமாக பிஎச்.டி. படித்துக் கொண்டிருந்தார். விபத்து காரணமாக அவரால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பையும் தொடர முடியவில்லை.
எனவே, விபத்து இழப்பீட்டு தொகையாக ரூ.24 லட்சம் வழங்க வேண்டும் என லாரி ஓட்டுநர், உரிமையாளர், காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா, "லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு, அஜாக்கிரதை, அதிவேகத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது. எனவே, மனுதாரரின் வலி, வேதனை, மருத்துவ செலவுகள், வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றுக்காக மொத்தம் ரூ.10.14 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் 30 நாட்களுக்குள் லாரியின் உரிமையாளர் மற்றும் ராம் ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் இணைந்து வழங்க வேண்டும். தீர்ப்புத் தொகையில் 70 சதவீதத்தை மனுதாரர் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகையை ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக செலுத்திவிட்டு, 3 ஆண்டுகளுக்குப்பிறகு அதை முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். அதுவரை வைப்புத்தொகைக்கான வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர் பெற்றுக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.