Regional03

விவசாயிகள் மகசூலை பெருக்க மண், நீர் ஆய்வு செய்ய வேண்டுகோள் :

செய்திப்பிரிவு

மண் ஆய்வு செய்து மகசூலை பெருக்கிக் கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 1.80 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பல்வேறு வகையான வேளாண்மை பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பட்டு வளர்ப்புப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாலும், மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து கொண்டே வருகிறது. மண்ணில் உள்ள அங்ககச் சத்துக்களின் அளவு குறைந்து மகசூலை பெரிதும் பாதிக்கிறது. மாவட்டத்தில் கரிசல் மண், செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த குறுமண் உள்ளிட்ட பல்வேறு மண் வகைகள் உள்ளன.

விவசாயிகள் தங்கள் மண்ணின் நிலை அறிந்து உரம் இட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் முறைப்படி சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக வளாகத்திலுள்ள மண் பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு முடிவுகளைப் பெறலாம்.

கோடை உழவிற்கு பிறகு, மண் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்வதால் கோடைப் பருவம் மற்றும் பின்பு வரும் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்போகும் பயிர்களுக்குத் தேவையான உரப்பரிந்துரை பெற்று பயன் பெறலாம். மண் மாதிரி ஒன்றினை பரிசோதனை செய்ய ரூ.20 மற்றும் நீர் மாதிரி ஆய்வு செய்ய ரூ.20 மட்டுமே ஆகும். மேலும் விவரங்களுக்கு வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

SCROLL FOR NEXT