கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் ராம்நாயக்கன் ஏரி அருகே உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்கா மூடப்பட்டது. இதையடுத்து, நுழைவு வாயிலில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பும் மற்றும் கரோனா விதிமீறல் அபராதம் தொடர்பான எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. படம்: ஜோதி ரவிசுகுமார் 
Regional03

ஓசூரில் சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் மூடல் : தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள இரு பூங்காக்கள் மூடப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் முக்கிய பகுதியில் கரோனா விதிமீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதில், பூங்காக்களை மூடவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராம்நாயக்கன் ஏரியை ஒட்டியவாறு அமைந்துள்ள இரு பூங்காக்களின் பிரதான வாயில்களும் மூடப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கரோனா தடுப்பு எச்சரிக்கை பலகை வைக்கப் பட்டுள்ளன.

இதில், ஒரு பூங்கா காலை மற்றும் மாலை நேரங் களில் நடைபயிற்சிக்காக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அதேபோல ஆயிரக்கணக்கான சிறுவர்களின் பயன்பாட்டில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பிரதான பூங்காவாக சிறுவர் பூங்கா இருந்து வந்தது.

இந்நிலையில், கரோனா எதிரொலியாக இரு பூங்காக்களும் மூடப்பட்டு கரோனா விதிமீறல் அபராதம் பட்டியல் அடங்கிய எச்சரிக்கை பலகை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை பலகையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றா விட்டால் தலா ரூ.500 அபராதமாக விதிக்கப்படும்.

மேலும், சலூன்கள், ஜிம், வணிக வளாகங்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, நகரின் முக்கிய சாலைகளில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டுள்ளன.

SCROLL FOR NEXT